முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சு எடுபடும் – இந்திய துணை கேப்டன் ரஹானே பேட்டி

முதலாவது டெஸ்டில் தடுமாற்றம் கண்ட இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே சென்னையில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சொந்த மண்ணில் 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறோம். கடைசியாக உள்ளூரில் நாங்கள் விளையாடிய டெஸ்ட் தொடரில் எனது ஸ்கோரை (2019-ம் ஆண்டில் வங்காளதேசத்துக்கு எதிராக 86, 61 ரன், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 59 மற்றும் 115 ரன் எடுத்தார்) பார்த்தால் அதில் நான் எப்படி விளையாடி இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.

எந்த ஒரு தனிப்பட்ட வீரரின் சாதனையை விட ஒரு அணியாக எப்படி செயல்படுகிறோம் என்பதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. அணிக்கு நம்மால் எப்படி பங்களிப்பு அளிக்க முடியும் என்பதில் தான் எனது முழு கவனமும் உள்ளது. கடந்த 10-15 டெஸ்டுகளில் எனது தனிப்பட்ட செயல்பாட்டை திரும்பிப் பார்த்தால், நான் கணிசமாக ரன்கள் சேர்த்திருப்பது தெரியும். வெளியில் என்னைப் பற்றி என்ன விமர்சிக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் போட்டிக்கான ஆடுகளத்தை பார்க்கவே வித்தியாசமாக தெரிகிறது. நிச்சயம் முதல் நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்பும். முதல் பகுதியில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். முதலாவது டெஸ்ட் தோல்வியை மறந்து விட்டு இதில் கவனம் செலுத்த வேண்டும். இங்குள்ள சூழலை நாங்கள் நன்றாக அறிவோம். இங்கு எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என தெரிவித்தார்.

x