பிரதமர் மோடி பெருமிதம் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகள்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பேசியதாவது:-
கொரோனா நெருக்கடியின் போது நமது விவசாயத் துறை மீண்டும் வலிமையைக் காட்டியுள்ளது. நமது விவசாயத் துறை, விவசாயிகள் மற்றும் கிராமங்கள் ஆகியவை சுயசார்பு பாரதத்தின் (தன்னிறைவு இந்தியா) ஆதாரங்கள். இவை வலுவாக இருந்தால், சுயசார்பு பாரதத்தின் அஸ்திவாரம் பலமாக இருக்கும்.
தன்னிறைவு இந்தியாவை கட்டமைப்பதில், விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விவசாயிகள் வலுவாக இருந்தால் நாடு பலமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் சேவை சட்டத்தில் இருந்து பழங்கள், காய்கறிகள் நீக்கப்பட்டதால், ஏராளமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளார்கள். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் பெரியளவில் பயன்பெறுவார்கள்.
யார் நிலத்தில் வலுவாக கால் பதித்திருக்கிறார்களோ அவர்கள் எந்த புயலையும் எதிர்கொள்ளும் உறுதிப்பாட்டோடு விளங்குவார்கள். கொரோனாவின் இந்த கடினமான இந்த வேளையில் நமது விவசாயத்துறையில், நமது விவசாயிகள் இந்த உறுதிப்பாட்டிற்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டுகள்.
தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு அமைப்பு மூலம் வாழை, காய்கறிகள் கொள்முதல் செய்தனர். வாழை மற்றும் காய்கறிகளை கொள்முதல் செய்து சென்னை நகருக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா பிரச்சினை காலகட்டம், குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பை அதிகப்படுத்தியுள்ளதுடன், அவர்களின் நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.