அருணாச்சல பிரதேசத்தில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ளது சீனா

இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இரு பக்கமும் உயிரிழப்பு ஏற்பட்டது.

அதன்பின் பல கட்டங்களாக பல தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றாலும், சீனா பின்வாங்குவதில் தயக்கம் காட்டியது.

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலும் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது. இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான எந்த செயல்பாடும் தென்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாத செயற்கைகோள் படத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்திய எல்லையில் சீனா கட்டுமான வேலைகளை செய்து வருவதாக வெளிவரும் செய்திகளை நாம் சமீபகாலமாக பார்க்கிறோம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சீனா அதை செய்து வருகிறது.

இந்திய அரசும் சாலைககள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற முக்கியமான கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது. அது எல்லை அருகில் உள்ள மக்களை இணைப்பதற்கானதாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எல்லை அருகில் இந்தியா அதிகமான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. ராணுவத்தை குவித்து வருகிறது என சீனா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், தற்போது சீனா கட்டியுள்ள கிராமம் அருகில் இந்தியா எந்தவொரு கட்டமைப்பையும் உருவாக்கவில்லை.

x