காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை

காஷ்மீர் யூனியன் பிரதேசம் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டி, எல்லை பாதுகாப்பு படையின் ரோந்து குழு நேற்று ரோந்து சென்றது. பயங்கரவாதிகள் கட்டிய சுரங்கப்பாதையை கண்டுபிடிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டது.

அப்போது, போமியான் கிராமத்தில் சர்வதேச எல்லையில் ஒரு சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை ரோந்து குழு கண்டுபிடித்தது. அந்த பாதை, 150 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்தது. சுரங்கப்பாதையின் மறுமுனை, பாகி்ஸ்தான் பகுதியில் உள்ளது.

இந்த தகவல் அறிந்தவுடன், எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ஜம்வால் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர், ஐ.ஜி. ஜம்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த சுரங்கப்பாதை, சம்பா, கதுவா மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 3-வது சுரங்கப்பாதை ஆகும். அந்த சுரங்கப்பாதைகள் போலவே இதுவும் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக இது கட்டப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் குறியீடு காணப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் அரசு அமைப்புகளின் தொடர்பு இருப்பது தெளிவாகிறது.

சுரங்கப்பாதையின் மறுமுனையில், பாகிஸ்தானின் ஷாகேர்கர் பகுதி உள்ளது. அப்பகுதி, பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களுக்கும், தளங்களுக்கும் பெயர் பெற்றது ஆகும்.

இந்த பாதை, புதிதாக கட்டப்பட்டதா அல்லது பழையதா என்பது விசாரணைக்கு பிறகு தெரிய வரும். ஆனால், மணல் மூட்டைகளில் தயாரிப்பு ஆண்டு 2016-2017 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அப்போது கட்டப்பட்டதாக இருக்கலாம்.

கடந்த காலத்தில் இதன் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவினார்களா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும். ஆனால், சமீப நாட்களில் ஊடுருவல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், சமீப காலமாக ரோந்து பணியை தீவிரப்படுத்தி வருகிறோம்.

பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் எப்போதும் வாய்ப்பை எதிர்பாா்த்து காத்திருக்கிறது. ஆனால், எல்லை பாதுகாப்பு படை உஷாராக இருப்பதால், அதை முறியடித்து வருகிறோம். பாகிஸ்தானின் சதிகளை முறியடிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

x