நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்த நாள் தினத்தை விவசாயிகள் தினமாக கொண்டாட உள்ளோம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் இன்று 39-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் இடையே 6 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

6-வது சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில் 4 கோரிக்கைகளில் 2-ல் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.

ஆனால், 50 சதவிகித பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என மத்திய அரசு கூறுவது தவறான தகவல் என விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தன. இதனால், விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், விவசாய சங்கங்கள் – மத்திய அரசு இடையே 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற்ற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மத்திய அரசிடன் கோரிக்கை விடுக்க உள்ளனர்.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக விவசாய சங்கங்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தன.

விவசாய சங்கங்களில் தலைவர்கள் கூறியதாவது:-

ஜனவரி 13-ம் தேதி வேளாண் சட்டங்களின் நகலை தீ வைத்து எரித்து லஹோரி விழா கொண்டாட உள்ளோம். நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்த நாள் தினமான ஜனவரி 23-ஐ விவசாயிகள் தினமாக கொண்டாட உள்ளோம்.

மத்திய அரசு தங்கள் பிடிவாதத்தை கைவிட வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்வரை நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. விவசாயிகள் தங்கள் உயிரை இழப்பது மிகுந்த வருத்தமாக உள்ளது.

நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தை கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைக்க உள்ளோம். இங்கு தற்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது.

இதனால், மழைநீர் புகாத வகையிலான கூடாரத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பெண்களுக்கும், முதியோருக்கும் வெந்நீர் மற்றும்
போர்வைகளை ஏற்பாடு செய்து வருகிறோம்.

x