டெல்லி போராட்டக்களத்தில் லாரியை சொகுசு வீடாக மாற்றிய விவசாயி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரம் கூடாரங்களை அமைத்தும், டிராக்டர் டிரைலர்கள் மீது தார்பாய் போட்டு மூடி வீடு போன்று மாற்றியும் இரவு நேரங்களில் அதில் தூங்குகின்றனர். பலர் போராட்டக்களத்திலேயே கம்பளி விரித்து தூங்குகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு, உடைகளை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர்.

சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உணவு வழங்கி வருகிறார். இதற்காக அவர் போராட்டக்களத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது லாரியை சொகுசு வீடு போன்று மாற்றி அமைத்து அதில் தங்கியிருக்கிறார். லாரியின் பின்பகுதியில் வாசல் அமைத்துள்ளார். அழகிய வேலைப்பாடுகளுடன், விவசாயத்தை எதிரொலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
வாசலை திறந்து உள்ளே சென்று பார்த்தால், சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சோபா, மெத்தை, டிவி, டாய்லெட் என அனைத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த விவசாயி கூறுகையில், ‘போராடும் விவசாயிகளுக்கு உணவு வழங்கும் சேவையை செய்வதற்காக டிசம்பர் 2ம் தேதி இங்கு வந்தேன். எனது அனைத்து வேலைகளையும் விட்டு இங்கு வந்து சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு உணவு வழங்கினேன். 7 நாட்களில் எனக்கு வீடு மற்றும் குடும்பத்தினரின் நினைவு வந்தது. அதனால் இந்த லாரியை வீடு போன்று மாற்றினேன்’ என்றார்.
x