டெல்லியில் வரலாறு காணாத பனிப்பொழிவு

டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

ஏற்கனவே புகைமூட்டம், காற்று மாசு காரணமாக டெல்லி நகரம் திணறி வந்தது. தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லியில் குறைந்த அளவு வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகபட்சம் 19 டிகிரி செல்சியஸ் அளவாகவும் இருக்கும் என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று கடும் பனிப்பொழிவு மிக அதிக அளவில் காணப்பட்டது. சராசரியாக டெல்லியில் வெப்பநிலை 1. 1 செல்சியசாக குறைந்தது.

சில இடங்களில் பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழேயும் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் மிக குறைந்த வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

இன்று காலை 6 மணிக்கு டெல்லி நகரில் அடர்த்தியாக மூடுபனி காணப்பட்டது. சப்தர்ஜங் பாலம் ஆகிய இடங்களில் பூஜ்ஜியம் செல்சியசுக்கு கீழே வெப்பநிலை காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.

முண்ட்கா, ராஜ்காட், டி.என்.டி. விமான நிலைய ஓடுபாதை மூடுபனியால் போர்த்தியது போல் காணப்பட்டன. சாலைகளிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. கடும் பனிப்பொழிவு காணரமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

டெல்லியில் கடந்த 15 ஆண்டுகள் இல்லாத அளவு இந்த வருடம் டிசம்பர் மாதம் கடும் பனிப்பொழிவு காரணமாக வெப்பநிலை கடுமையாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக டெல்லியில் வெப்பநிலை குறைந்துவருகிறது. இன்று ஏற்பட்ட பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் காரணமாக வெப்பநிலை அதிகபட்சமாக குறைந்து காணப்பட்டது.

x