முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தையொட்டி கிசான் சம்மான் திட்ட தின விழா பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் வேளாண் சந்தையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-
மத்திய அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் திட்ட பயன்கள் விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் ரொக்கமாக வரவு வைக்கப்படுகிறது. பிரதமர் மோடி இன்று (நேற்று) 9 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.18 ஆயிரம் கோடி நிதியை வரவு வைப்பதை தொடங்கி வைத்துள்ளார்.
விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை வேளாண் சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. அதை மாற்றி, விவசாயிகள் தாங்கள் விரும்பும் பகுதிகளில் விளைபொருட்களை விற்பனை செய்ய வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களை வேளாண் சந்தைகளிலோ அல்லது வெளிப்புற சந்தைகளிலோ எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ள முடியும். இதை 99 சதவீத விவசாயிகள் வரவேற்று உள்ளனர்.
விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவது தான் பிரதமரின் இலக்கு. அதற்காக அவர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். விவசாயிகள் நிம்மதியாக, சுதந்திரமாக, சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பது எங்களின் விருப்பம். அதை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இந்த விழாவில் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமகேர், உணவுத்துறை மந்திரி கோபாலய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி, கிசான் சம்மான் திட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் நிகழ்ச்சி அதே இடத்தில் காணொலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.