மாநில அரசின் செயல்பாடுகளுக்குள் மத்திய அரசு வெட்கமின்றி தலையிடுகிறது

மேற்குவங்காளத்தின் டைமண்ட் ஹார்பர் பகுதிக்கு கடந்த 10-ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது, ஜேபி நட்டா பயணித்த வாகனமும், அவரது பாதுகாப்பிற்கு வந்த வாகனங்கள் மீதும் மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ஜே.பி.நட்டா-வின் பயணத்திற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடம்மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விடுவிக்க மேற்குவங்காள அரசு மறுத்துவிட்டது. இதனால், மத்திய பாஜக அரசுக்கும் முதல்மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே அதிகார மோதல் உச்சத்தை தொட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஆதரவான கருத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக முக ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மேற்குவங்காளத்தின் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பாஜக அரசு தன்னிச்சையாக பணியிடமாற்றம் செய்திருப்பது
எதேச்சதிகாரம் மற்றும் கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது.

நாட்டின் சிவில் சேவையை டெல்லியில் ஆளும் கட்சியின் விருப்பங்களாலும், ஆர்வத்தாலும் கட்டளையிடக்கூடாது. ஐபிஎஸ் அதிகாரிகல் இடமாற்ற உத்தரவை பிரதமர் உடனடியாக ரத்து செய்யவேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமல்லாமல் சத்தீஸ்கர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முதல்மந்திரிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
’போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதன் மூலம் மாநில அரசின் செயல்பாடுகளுக்குள் மத்திய அரசு வெட்கமின்றி தலையிடுகிறது. வங்காள மக்களுக்கு ஒற்றுமையை காண்பித்தல் மற்றும் கூட்டாட்சி மீதான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர் முதல்மந்திரி), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்மந்திரி), அம்ரீந்தர் சிங் (பஞ்சாப் முதல்மந்திரி), அசோக் கேலாட் (ராஜஸ்தான் முதல்மந்திரி), முக ஸ்டாலின் (திமுக தலைவர்) ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி’

என பதிவிட்டுள்ளார்.