கேரள உள்ளாட்சி தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 8ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 10ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், 14ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 77.76 சதவீதம் பதிவான நிலையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது.

3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சுமார் 3 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படுகின்றன. இன்று பிற்பகல் முடிவுகள் தெரியவரும்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் கூட்டணியான மார்க்சிஸ்ட் தலைமையிலான எல்டிஎப், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் மற்றுளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎப் கூட்டணி அதிக அளவிலான பஞ்சாயத்துகள், ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சிகளை கைப்பற்றியது. மாவட்ட பஞ்சாயத்துகளை பொருத்தவரை எல்டிஎப், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் சம அளவில் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.