தடுப்பூசிக்கு பின்பான பாதகமான நிகழ்வுகள் மிகவும் முக்கியமான பிரச்சினை

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி இங்கிலாந்தில் முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்தது.

பஹ்ரைன், கனடா நாடுகளும் பைசர் தடுப்பூசிக்கு தயாராகி வருகின்றன. அமெரிக்காவிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தில் ஒன்றிரண்டு பேருக்கு தடுப்பூசி போட்ட பின் ஒவ்வாமை ஏற்பட்டது. இதனால் இந்தியா தடுப்பூசிக்கு அனுமதி கொடுப்பதில் அவசரம் காட்டவில்லை. விலை உயர்வு, மிகக்குளிர்ந்த நிலையில் மருந்தை வைக்க வேண்டும் என்பதால் கவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில் ‘‘நோய்தடுப்புக்கு பின்பான பாதகமான நிகழ்வுகள் முக்கிய பிரச்சினை. 10 ஆண்டுகளுக்கு மேலாக நோய் தடுப்பு திட்டத்தை மேற்கொள்ளும்போது, நாம் சில பாதகமாக விளைவுகளை குழந்தைகளிடம் மற்றும் கர்ப்பிணி பெண்களிடம் தடுப்பூசிக்கு பின்னர் பார்க்க முடிந்தது.

ஆகவே, கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி மருந்து நடைமுறைக்கு வரும்போது, இதுபோன்ற பாதகமான நிகழ்வுக்கு வாய்ப்பில்லை என்று மறுத்துவிட முடியாது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடும்போது, இங்கிலாந்தில் முதல் நாளிலேயே பாதகமான நிகழ்வு நடந்தது. ஆகவே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை எதிர்கொள்ள தயாராக வேண்டியது அவசியம்’’ என்றார்.