அசாமில் ரூ.165 கோடி போதை பொருள் பறிமுதல் – வெளிநாட்டு கடத்தல்காரர்கள் கைது

இந்தியாவிற்குள் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதை பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இதுதவிர்த்து வேறு சில நாடுகளில் இருந்தும் மறைமுக கடத்தல்கள் நடந்து வருகின்றன. இதனை இந்திய போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது வருகின்றனர்.  போதை பொருளையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் அசாம் மாநிலத்தின் சோனாரி காவன் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 2.076 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளையும், 101.48 கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், அசாம் ரைபிள் படை பிரிவினர் மாநில எல்லை பகுதியில் அமைந்த மோரே நகரில் உள்ள 2 இடங்களில் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.165 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அவர்கள் கைப்பற்றினர்.
இதில் தொடர்புடைய 2 மியான்மர் நாட்டு கடத்தல்காரர்கள் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.