இந்த ஆண்டு உருவாகிய 4 தீவிர புயல்கள்

இந்த ஆண்டு உருவாகிய 5 புயல்களில் 4 புயல்கள் ‘தீவிர புயல்’ ரகத்தை சேர்ந்தவை ஆகும்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியதாவது:-

அரபிக்கடலில் பருவமழை காலத்துக்கு முன்பும், வங்காள விரிகுடாவில் பருவமழை காலத்துக்கு பின்பும் புயல்கள் உருவாவது வழக்கமானதுதான்.

கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் ஆண்டுக்கு 4 புயல்கள் வீதம் உருவாகி வருகின்றன.

இந்த ஆண்டு 5 புயல்கள் உருவாகின. இதுவும் இயல்பானதுதான்.

இந்த ஆண்டின் முதல் புயலான ‘அம்பான்’, கடந்த மே மாதம் வங்காள விரிகுடாவில் உருவானது. பின்னர், சூப்பர் புயலாக உருவெடுத்தது. இருப்பினும், அதிதீவிர புயலாக வலுவிழந்து, மே 19-ந் தேதி மேற்கு வங்காளத்தையும், வங்காளதேசத்தையும் தாக்கியது.

அடுத்த 2 வாரங்களில், ‘நிசர்கா’ என்ற தீவிர புயல், அரபிக்கடலில் உருவானது. மும்பை அருகே அலிபாக்கில் கரையை கடந்தது. இது, கேரளாவில் தென்மேற்கு பருவமழை சரியான தேதியில் தொடங்க உதவியது.

கடந்த ஒரு மாத காலத்தில், வங்காள விரிகுடாவில் 2 புயல்களும், அரபிக்கடலில் ஒரு புயலும் உருவாகின.

அவற்றில், ‘கேட்டி’ என்ற மிக தீவிர புயல், கேரளாவுக்கு அதிக மழையை கொடுத்தது.

பின்னர், வங்காள விரிகுடாவில் உருவான ‘நிவர்’ புயல், மிக தீவிர புயலாக தமிழ்நாடு-புதுச்சேரி இடையே கரையை கடந்தது. ஒரு வாரத்துக்குள் ‘புரெவி’ என்ற புயல், கடந்த 2-ந் தேதி இலங்கை கடல் பகுதியில் கரையை கடந்தது. பின்னர், ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்து தென்தமிழ்நாட்டின் கடலோரத்தில் கரையை கடந்தது. 5 புயல்களில் இது மட்டுமே தீவிர புயல் இல்லை.

இம்மாதம் மீதியுள்ள நாட்களில், இன்னும் ஒரு வாரத்துக்குள் எந்த புயலும் வராது. இருப்பினும், இது புயலுக்கான மாதம் என்பதால், நிலைமையை கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.