கொரோனா தடுப்பூசியின் விலையை குறைத்தது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் என இரண்டு தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கோவிஷீல்டு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய தொகுப்பிற்கு 50 சதவீதம் போக மீதமுள்ள 50 சதவீத மருந்துகளை மாநில அரசுகள் மற்றும் வெளிச்சந்தையில் (தனியார்) விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான விலையை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.

அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய் எனவும், தனியாருக்கு ஒரு டோஸ் 600 ரூபாய் எனவும் நிர்ணயித்தது. ஏற்கனவே பொருளாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு மேலும் நிதிச்சுமையை உயர்த்தும் என மாநில அரசுகள் தங்களது அதிருப்திகளை தெரிவித்தன. மேலும், மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

இன்று மாலை 4 மணிக்கு 18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் தேவைப்படும். இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, மாநில அரசுகளுக்கு வழங்கும் விலையை ரூ. 400-ல் இருந்து 300 ரூபாயாக குறைத்துள்ளது.

x