அசாமை உலுக்கிய நிலநடுக்கம்: வீடுகள் இடிந்தன- மக்கள் பீதி

சட்டசபை தேர்தல் முடிந்த மாநிலங்களில் ஒன்று அசாம். அங்கு மார்ச் 27-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்தது. ஓட்டு எண்ணும் பணி தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அம்மாநிலத்தையே உலுக்கியது.

சோனித்பூர் அருகே மையமாக கொண்டு இன்று காலை 7.51 மணியளவில் 17 கி.மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் 6 முறை நிலநடுக்கம் உருவானது. 8.03 மணி அளவில் 4.7 ரிக்டர் அளவுகோலிலும், 8.13 மணியளவில் 4 ரிக்டர் அளவுகோலிலும், 8.25 மணியளவிலும், 8.44 மணியளவிலும் 3.6 ரிக்டர் அளவுகோலிலும் இது பதிவாகி இருந்தது.

நிலநடுக்கம்

நாகூன் மாவட்டத்தில் 10.05 மணியளவில் 3.2 ரிக்டர் அளவு கோலிலும், தேஜ்பூரில் 10.39 மணியளவில் 3.4 ரிக்டர் அளவு கோலிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

அடுத்தடுத்து மொத்தம் 7 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அசாமே கதிகலங்கியது. கவுகாத்தி, தேஜ்பூர், நாகூன், மகல்டோய், திகிஜா ஜூலி, மாரிகன் ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

சோனித்பூர் மாவட்ட தலைநகர் தேஜ்பூரில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. கவுகாத்தி உள்ளிட்ட மற்ற இடங்களிலும் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.

கவுகாத்தியில் பல இடங்களில் கண்ணாடிகள் இடிந்து கீழே விழுந்தன. சுவர்கள், மின் விசிறிகளும் பலத்த சேதமடைந்தன. இதேபோல நகூன் பகுதியிலும் கட்டிடங்கள் சேதமடைந்தன.

7 முறை ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர். பல்வேறு நகரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி தஞ்சம் அடைந்தனர். எப்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட முழு சேத விவரம் இன்னும் தெரியவில்லை. இதுவரை உயிர் சேதம் பற்றி எந்த தகவலும் இல்லை.

ஏற்கனவே கொரோனா பரவலை குறைக்க இரவு நேர ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது நிலநடுக்கம் அம்மாநில மக்களுக்கு கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநில முதல் மந்திரி சர்பானந்த சோனாவால் மாவட்ட நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் குறித்த பாதிப்பை கேட்டறிந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

அசாமில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற் பட்டது. அனைவரது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிலைமைகளை கண்காணித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அசாம் முதல் மந்திரியை தொடர்பு கொண்டு பேசினார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் கடந்த 5-ந் தேதி 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் வடகிழக்கில் மற்ற மாநிலங்களில் உணரப்பட்டது. பக்கத்து மாநிலங்களான அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா மற்றும் மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

x