வாக்காளர்களை கவர பண மூட்டையுடன் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் -மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 27-ந் தேதி தொடங்கி அடுத்தமாதம் 29-ந் தேதி வரையில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

ஆனால் அவரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியே தீருவது என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளது. மம்தா கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் முதல் மந்திரிகள் வரை பலரும் பா.ஜ.க.வுக்கு தாவுகின்றனர்.

இந்த தருணத்தில் பாசிம் மெதினிபூரில் நேற்று மம்தா பானர்ஜி பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும், ஓட்டுகளை அள்ளுவதற்காகவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்றனர்.

புயல் பாதித்த பகுதிகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை எங்களது திரிணாமுல் காங்கிரஸ் அரசு வழங்கியது. ஒன்றிரண்டு இடங்கள் விடுபட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் மக்கள் பக்கம் ஓடோடிச்சென்று நின்றோம். அப்போது இந்த பா.ஜ.க. தலைவர்கள் எங்கே போனார்கள்? மனிதர்களின் துன்பமான நேரத்தில் அவர்கள் எப்போதுமே காணாமல் போய் விடுகின்றனர்.

‘தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம்’

தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது.

வீடுகளில் வாக்காளர்கள் கணக்கெடுப்பின்போது, வீட்டில் ஆளில்லை என்றால் பா.ஜ.க. அவர்களை விட்டு விடும். அவர்கள் உங்களை பட்டியலில் இருந்து நீக்கி விடுவார்கள். ஆனால் அவர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இங்கு புதுப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

மேற்கு வங்காளத்தில் இருந்து ஒரு குடும்பத்தின் ஒரு நபரையோ கூட, நாட்டின் ஒரு குடிமகனையோகூட வெளியேற்ற விட மாட்டோம்.

பா.ஜ.க. கலகவாதிகளின் கட்சி. நாங்கள் கலகத்தை விரும்பவில்லை. நாங்கள் ரத்தம் சிந்துவதை விரும்புவதில்லை. பழிவாங்கும் அரசியல், மாநிலத்துக்குள் நுழைய நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

x