குஜராத்தில் பரபரப்பு – தேர்தல் பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்த முதல் மந்திரி

குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21 மற்றும் 28-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசார வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், குஜராத்தின் வதோதராவில் உள்ள நிஜம்புரா பகுதியில் நேற்று விஜய் ரூபானி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் விஜய் ரூபானி மயங்கி விழுந்தார். அருகிலுள்ள காவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என பாஜகவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, துணை முதல் மந்திரி நிதின் படேல் கூறுகையில், தற்போது விஜய் ரூபானி உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவித்தார்.

x