குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களும்… அதனால் கிடைக்கும் நன்மைகளும்…

உடலைக் காக்கும் விளையாட்டுகள் நம் பாரம்பரிய விளையாட்டுகள் எனப் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பல நன்மைகள் இருக்கின்றன. பாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மூளைத்திறன், கவனத்திறன், பார்வைத்திறன், வர்ம புள்ளிகள் தூண்டப்படுவது, அக்கு புள்ளிகள் இயக்கம் பெறுவது என ஒவ்வொரு விளையாட்டும் பல்வேறு மருத்துவ பலன்களைத் தருகின்றன. அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.

பரமபதம் : ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து, காயை நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டால், கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.

பல்லாங்குழி : 12 குழிகளில் புளியங்கொட்டை போட்டு, வரிசையாக எடுத்து விளையாடும் விளையாட்டு. எண்களை சொல்லிக் கொண்டே விளையாட வாய்ப்பாகும். சிந்தனைத்திறன் மேலோங்கும். கைவிரல்களுக்கு நிறைய வேலைக் கிடைக்கும். குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்ஸ் நன்கு செயல்பட உதவும்.

மியூசிக் சேர் : பாடலை ஒலிக்க விட்டு, சுற்றி வைத்திருக்கும் சேர்களை சுற்றி ஓடும் விளையாட்டு. குழந்தைகளுக்கு உடலுழைப்பு கிடைக்கும். ஓடுவது, உட்காருவது, கவனிப்பது போன்றவை இந்த விளையாட்டில் அதிகம். குண்டு குழந்தைகள் இளைக்க வாய்ப்பு உண்டு. கால் தசைகளுக்கு வலு கிடைக்கும்.

கபடி அல்லது சடு குடு : 2 குழு இருப்பார்கள். இவர்களுக்கு இடையே ஒரு பெரிய கோடு இருக்கும். ஒரு நபர் எதிர் டீமில் உள்ள ஒரு நபரை தொட வேண்டும். கபடி கபடி எனச் சொல்லி கொண்டே இருக்க வேண்டும். உடலுழைப்பு தரும் விளையாட்டு இது. மூச்சுப்பயிற்சிக்கு இணையான பலன்கள் கிடைக்கும். பேச்சுத்திறன் மேலோங்கும். நுரையீரல் நன்கு செயல்படும்.

பச்சக்குதிரை : ஒரு நபரை கீழே குனிய வைத்து, மற்றொருவர் தனது இரு கைகளையும் குனிந்தவரின் முதுகில் வைத்து தாண்டி ஆடும் ஆட்டம். கை, கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும். கை, கால்கள் நன்கு ஸ்ட்ரெச் ஆகும். வளைவுத்தன்மை கிடைக்கிறது. பலமுடன் மற்றொருவரை தாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பலம் தரும் விளையாட்டு.

பாண்டி ஆட்டம் : செவ்வகம் வரைந்து, அதில் கட்டங்கள் வரைந்து ஒரு காலை மடக்கி, இன்னொரு காலால் நொண்டி அடிப்பது போல் நடந்து கொண்டு விளையாடும் ஆட்டம். கால்களின் தசை நரம்புகளுக்கு சீரான இயக்கம் கிடைக்கிறது. கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கிறது. உடல் சமநிலை சீராகிறது.

கில்லியாட்டம் : ஒரு சின்ன கட்டையை தரையில் வைத்து, அந்த கட்டையை பெரிதான கட்டையைக் கொண்டு அடித்து, எறிந்து, விளையாடுவது கில்லி விளையாட்டாகும். உடல் இயக்கங்கள் சீராக நடைப்பெறும்.

கும்மி ஆட்டம் : முளைவிட்ட தானியங்களை, ஒரு மண் பாண்டத்தில் போட்டு, நன்கு வளர்ந்து இருக்கும். அதனை முலைப்பாரி என்று கூறுவர். இதை நடுவில் வைத்து, பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் தட்டி, கும்மிப்பாட்டு பாடுவர். இதனால் கைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கிறது.

பம்பரம் : ஒரு வட்டத்தில் 3 பம்பரங்கள் வைக்கப்படும். வட்டத்துக்குள் உள்ள 3 பம்பரத்தை, தன் பம்பரத்தால் சுற்றி, விளையாடி பம்பரத்தை வெளியே வர செய்ய வேண்டும். பார்வைத்திறன், கவனத்திறன் மேலோங்கும்.

கோலிக்குண்டு : கோலியை ஒரு முனையில் ஒருவர் வைத்துக்கொள்ள, மற்றொருவர் தன்னுடைய கோலி குண்டை தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு குறிப்பார்த்து அடிக்க வேண்டும். குழந்தைகளின் பார்வை திறன் மேலோங்கும். கவனிப்பு திறன் அதிகரிக்கும். கைகளில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும்.