இல்லத்தரசிகளின் சிக்கலாக உருவெடுக்கும் மன அழுத்தம்

வேகமாக நகரும் எந்திர வாழ்க்கை முறையில் இல்லத்தரசிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் மன அழுத்தம் என்பது மிக முக்கியமானது. வேலைக்கு செல்லும் பெண்மணிகள் வெளிநபர்கள் சக பணியாளர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைப்பதால் மனஅழுத்தத்திலிருந்து தப்பி விடுகிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்கள் கணவர் குழந்தைகளுக்கான பொறுப்புக்களை முடித்து தனிமையில் இருக்கும்சூழலில் டிவி சமூக வலைத்தளங்கள் எனப்பலவற்றிலும் மனதை பாதிக்கும் விஷயங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால் மனதில் தேவையற்ற எண்ணங்கள் உருவாகி மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு நாளில் சுமார் 20 ஆயிரம் வார்த்தைகளாவது பிறருடன் பேசும் போது தான் மனம் லேசாகிறது.

மன அழுத்தம் காரணமாக சீரான மாத விடாய் சுழற்சியில் சிக்கல், குழந்தையின்மை, முறை தவறும் மெனோபாஸ் என பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் உடல் எடை அதிகரிப்பு பசியின்மை, ஞாபகமறதி, தேவையற்ற கோபம், தவறான பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும். மன அழுத்தத்திலிருந்து எளிதாக விடுபடுவதற்கான சில வழிகள்..

தனிமையை புறந்தள்ளுங்கள்

தனிமையில் இருக்கும் போது மனதை கெடுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தை வளமாக்கும் நேர்மறை விஷயங்களை சிந்தியுங்கள். மனதை அமைதிப்படுத்த தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். கண்ணாடி முன் நின்று உங்களிடம் நீங்களே பேசுவதும் ஒரு நல்ல வழியே.

பிடித்த வேலையை செய்யுங்கள்..

அன்றாட கடமைகள் முடித்த பின்னர் எந்த வேலையை செய்தால் மனதுக்கு பிடித்தமாக தோன்றுகிறதோ, அதை செய்யுங்கள். வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் கற்று கொடுப்பது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது போன்ற விஷங்களில் ஈடுபடலாம். பகுதிநேர தொழிலை மேற்கொள்வதால் குடும்ப பொருளாதார நிலை உயர்வதுடன் தேவையற்ற சிந்தனைகளிலிருந்தும் விடுபடலாம்.

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா சேர்த்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், மனதையும் பாதிக்கக்கூடும். காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவு வகைகளை உண்பதால் மனமும் உடலும் லேசாக மாறுவதை உணரலாம்.

ஆலோசனை பெறுங்கள்

ஆரம்ப நிலையிலேயே மன அழுத்த உணர்வை கண்டறியுங்கள். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு உள்ளது என்ற அடிப்படையில் தகுந்த நபரிடம் ஆலோசனை பெறலாம்.

பழக்கங்களை மாற்றுங்கள்

மற்றவர்களை விமர்சனங்கள் செய்வது மனதை சலனமாக்கும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவது ஆகியவற்றை தவிர்த்து, புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவதால் மனம் லேசாகி அழுத்தம் குறையும்.