நான் குடிகாரனா ; நடந்தது என்ன? – விஷ்ணு விஷால் நீண்ட விளக்கம்

நடிகர் விஷ்ணு விஷால் மீது அவர் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர். அதில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தினமும் இரவு மது குடித்துவிட்டு சத்தமாக பாட்டு வைத்து ஆட்டம் போடுவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் தங்களது தூக்கம் கெடுவதாகவும், ஏன் எனக் கேட்பவர்களை விஷ்ணு தகாத வார்த்தையில் பேசுவதாகவும் அதில் தெரிவித்திருந்தனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் பதில் அளித்திருக்கிறார். அதாவது தனது நேற்று டுவிட்டர் பக்கத்தில், “தினமும் குடிப்பவர்களுக்கு உடனடியாக சிக்ஸ் பேக் வந்துவிடாது. பல நாட்கள் மது அருந்தாமல் இருந்து கடுமையான டயட் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இதுகூட தெரியாமல் சிலர் பிதற்றுகிறார்கள்”, என பதிவிட்டிருந்தார்.

இப்போது நீண்ட விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், தினமும் படப்பிடிப்பில் 300 பேர் உடன் பணியாற்றுவதால் பாதுகாப்பு கருதி என் வீட்டில் தங்காமல் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறேன். நான் தயாரிக்கும் எப்ஐஆர் படம் தொடர்பாக தினமும் நான் பலரை சந்திக்கிறேன். வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறேன். நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் நேற்று முதல் என் மீது சில குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

என்னை சந்திக்க வந்த எனது பணியாளர்கள், விருந்தினர்களிடம் வீட்டு உரிமையாளர் தான் தவறாக நடந்தார். எனது படத்தின் ஒளிப்பதிவாளரின் பிறந்தநாளை நான் வசிக்கும் பிளாட்டில் கொண்டாடினோம். இந்த பார்டியில் ஆல்கஹால் உபயோகித்தது உண்மை தான். ஆனால் உடற்பயிற்சி மற்றும் சிக்ஸ் பேக் கருதி நான் எடுத்து கொள்ளவில்லை. மற்றபடி அங்கு எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரம் தடைப்பட்டது. போலீசிடம் நான் அமைதியான முறையில் தான் விளக்கம் கொடுத்தேன். வீட்டு உரிமையாளர் தகாத வார்த்தைகளால் பேசினார். அதனால் நானும் கோபப்பட்டு அப்படி பேசினேன். ஆனால் போலீஸிற்கு தெரியும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று, அதனால் அவர்கள் சென்றுவிட்டனர்.

முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால் பொதுமக்கள் மற்றும் மீடியாக்களால் நான் அதிகம் விமர்சிக்கப்படுகிறேன். நான் அதிகம் சத்தம் எழுப்பியதாகவும், வீட்டில் உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு தொந்தரவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. நேற்று நான் தவறாக காண்பிக்கப்பட்டுள்ளேன். அந்த வீடியோவில் வீட்டு உரிமையாளரிடம் நான் கோபப்பட்டு பேசும் வீடியோ தான் வந்தது. அவர் தவறான வார்த்தைகளை பேசியதால் தான் நான் அப்படி பேசினேன். எந்த ஒரு மனிதனும் கெட்ட வார்த்தையை சகித்து கொள்ள மாட்டான்.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நான் விளக்கம் கொடுப்பது கிடையாது. ஆனால் என்னை குடிகாரன், கூத்தாடி என்று தவறாக சித்தரிப்பதையும், நான் சார்ந்த சினிமா துறையை தவறாக காண்பிப்பதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது. என் வீட்டு உரிமையாளர் எப்படி நடந்து கொண்டார் என்பதை என்னால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். என் அப்பா வயது உடைய ஒருவரையும், அவரது குடும்பத்தையும் தவறாக காண்பிக்க நான் விரும்பவில்லை. நான் அவரின் மகனிடம் பேசிவிட்டேன். கடைசியாக, என் படப்பிடிப்பு முடிந்ததும், இந்த வீட்டை விட்டு காலி செய்யும் முடிவுக்கு வந்துவிட்டேன். நான் இப்படி செய்வதால் என்னை பலவீனமானவன் என்று நினைக்க வேண்டாம். தேவையற்ற விஷயங்களுக்காக நான் சண்டை போட விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகளுக்காக நான் நிறைய உழைக்க வேண்டி உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் அந்த சம்பவத்தின் போது தான் மது அருந்தவில்லை என்பதை விஷ்ணுவிஷால் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஏற்கனவே நடிகர் சூரி-யின் நில விவகாரம் தொடர்பான புகாரால் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோரது பெயர்கள் பெரும் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

x