2021-ல் ரிலீசுக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட படங்கள்…. வழிவிடுமா கொரோனா?

2020-ம் ஆண்டு உலக சினிமாவையே உருக்குலைத்த கொரோனோ, தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பாதிப்பிலிருந்து மற்ற துறைகள் படிப்படியாக மீண்டு வந்தாலும், சினிமா துறை இன்னும் மந்த நிலையில் தான் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதமே 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதித்தாலும், மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. காரணம், ஒருபக்கம் கொரோனா பயம் இருந்தாலும், தற்போது வரை பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தியேட்டரில் வெளியாகாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஈஸ்வரன் - மாஸ்டர் - பூமி
தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, 2021 பொங்கலன்று செம விருந்து காத்திருக்கு அப்டினே சொல்லலாம். ஏனெனில் விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் பூமி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த 3 படங்களைத் தவிர இந்த ஆண்டில் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தும் மேலும் சில படங்களும் இருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பனவற்றை பார்க்கலாம்.
அண்ணாத்த படக்குழுவினர்
முதலாவதாக ரஜினியின் அண்ணாத்த படம். கொரோனா பிரச்சனை மட்டும் இல்லேனா, இப்படத்தை கடந்தாண்டு ஆயுத பூஜைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். பின்னர் ரிலீசை பொங்கலுக்கு தள்ளிப்போட்டனர். இருப்பினும் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாத காரணத்தால் இப்படம் மேலும் தாமதமாகி உள்ளது. இந்தாண்டு இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கலாம்.
கமலின் இந்தியன் 2
அடுத்ததாக கமலின் இந்தியன் 2. ஷங்கர் இயக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. கடந்தாண்டு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்தில் 3 பேர் பலியானதால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 11 மாதங்கள் ஆகியும் இன்னும் தொடங்கிய பாடில்லை. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமை அஜித்
அஜித்தின் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. அதற்கு பின் எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு மவுனம் காத்து வருகிறது. படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என்பதால் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி இப்படத்தை வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன.
கே.ஜி.எப் 2 யாஷ்
யாஷின் கேஜிஎப் 2. 2018-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. ஓரிரு மாதங்களில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.
விக்ரமின் கோப்ரா
விக்ரமின் கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படம் உருவாகியுள்ளது. இதில் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்துவும் துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன் இயக்கி இருக்கிறார்கள்.
மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜுடன் தனுஷ்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
விஜய் சேதுபதியின் லாபம்
விஜய் சேதுபதிக்கு லாபம், கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், முகிழ் என மாதத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணும் அளவுக்கு கைவசம் வைத்துள்ளார்.
கார்த்தியின் சுல்தான்
கார்த்தி நடித்துள்ள சுல்தான் திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படங்கள் அனைத்தும் வெளியாகுமா என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.
x