தமிழிலும் விரைவில் பிக்பாஸ் சீசன் 4 : டீசரை வெளியிட்ட கமல்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாதங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா பிரச்சினையால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் ஒளிபரப்பை தொடங்கவில்லை. இதனால் எப்போது பிக் பாஸ் சீசன் 4 தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4க்கான வேலைகள் ஆரம்பமாகி விட்டதால், தமிழிலும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று(ஆக.,25) 2020-ம் ஆண்டுக்கான பிக்பாஸ் சீசன் 4க்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4க்கான டீஸரை கமல் வெளியிட்டுள்ளார். அதில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார் கமல். மேலும் அந்த வீடியோவில் கொரோனா பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு பேச்சோடு ஆரம்பித்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான லீடை அவர் கொடுத்துள்ளார். நாமே தீர்வு என்ற தலைப்பில் அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி குறித்த அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.