நடிக்க வரப் போகிறாரா யுவன்ஷங்கர் ராஜா ?

இசையமைப்பாளர்கள் சிலர் நடிகர்களாகவும் மாறி தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் அந்த வகையில் இசையமைப்பதை விட நடிப்பதில் தான் பிஸியாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் விரைவில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவையும் சீக்கிரமே பார்க்கலாம் போலிருக்கிறது.

டுவிட்டர் தளத்தில் அவ்வப்போது தன் படம் சார்ந்த பதிவுகளைப் போடுபவர் யுவன்ஷங்கர் ராஜா. ஆனால், சமீப காலத்தில் அவருடைய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ எடுக்கப்படும் போட்டோ ஷுட் புகைப்படங்கள் போல அவை இருக்கின்றன. ஏற்கெனவே சில பாடல்களுக்காக திரையில் முகத்தைக் காட்டியவர் யுவன். அவருக்குள்ளும் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒருவேளை நடிக்க வருவதற்கு முன்னோட்டமாகத்தான் இப்படி புகைப்படங்களை யுவன் பகிர்கிறாரோ என்ற ஒரு சந்தேகம் வந்துள்ளது.

யுவன்ஷங்கர் ராஜாவை ஏற்கெனவே நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அவரது சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். இருந்தாலும் யுவனுக்கு மேலும் சில இயக்குனர்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். திரைக்குப் பின்னால் இருக்கும் யுவனை யார் திரைக்கு முன்னால் கொண்டு வரப் போகிறார்களோ ?.