சூர்யா படத்துக்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அருண் விஜய் மகன்

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தரமான குடும்ப படங்களை தயாரித்து வருகிறது. இந்தப்பட நிறுவனம் அடுத்து குழந்தைகள் படத்தை தயாரிக்கிறது. இதில், நடிகர் விஜய குமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் கதை நாயகனாக நடிக்கிறான். அவனுக்கு 9 வயது ஆகிறது. 3-ம் வகுப்பு படிக்கிறான்.
சூர்யா தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: “தமிழ் சினிமாவை பொறுத்தவரை குழந்தைகள் படம் மிக அரிதாகவே தயாரிக்கப்படுகின்றன. சூர்யாவின் 2டி நிறுவனம் அழகான கருத்துள்ள படங்களையே தயாரித்து வருகிறது. அந்த வகையில், இது குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்.
ஆர்னவ் விஜய்
ஆர்னவ் விஜய்யை திரையுலகுக்கு அறிமுகம் செய்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். இது, என் மனதுக்கு நெருக்கமான படம். ஒரு சிறுவனுக்கும், அவனது நாய்க்குட்டிக்கும் இடையே உள்ள அழகான உறவை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.
மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் நடிப்பதற்காக ஆர்னவ் விஜய்க்கு கூத்துப்பட்டறையில், ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது”. இவ்வாறு அவர் கூறினார்.