கணக்கு வைத்துக்கொண்டதே இல்லை

மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி உள்ளது. இப்படத்தை கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்க ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்துள்ளார். இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் 25ந்தேதி வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஷகிலா அளித்த பேட்டியில் கூறியதாவது:
டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனுபவம்?
28 ஆண்டுகளாக சினிமா துறையில் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டேன். ஆனால் டிவியில் வரும் சமையல் நிகழ்ச்சி என்னை இன்னும் பிரபலமாக்கிவிட்டது. டிவியின் வளர்ச்சி அபாரமானது.
நடித்த படங்களின் எண்ணிக்கை?
2 படங்கள் இயக்கி இருக்கிறேன். நடித்த படங்களின் எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை. கணக்கு வைத்துக்கொண்டதே இல்லை. நிறைய ஏமாற்றப்பட்டேன்.
இன்னும் வாடகை வீட்டில் வசிப்பது ஏன்?
நான் சம்பாதிப்பது அனைத்தையும் என் அக்காவிடம் தான் கொடுத்துவைத்தேன். அவர் ஏமாற்றிவிட்டார். என்னை போன்ற நடிகைகளுக்கு இது ஒரு பெரிய பாடம். ஆனால் பொருளாதார ரீதியாக சிரமத்தை உணர்ந்தது இல்லை. நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்து பழகியதால் எந்த எதிர்பார்ப்போ வருத்தமோ இல்லை.
ஷகிலா
நிஜத்தில் உங்கள் கேரக்டர் எப்படி?
கோழை. அதை மறைக்க தான் தைரியமாக இருப்பதை போல் நடிக்கிறேன்.
செக்ஸ் படங்களில் நடித்தபோது மிரட்டல்கள் வந்ததா?
ஒரு அமைச்சர் மூலமாக மறைமுக மிரட்டல் வந்தது. என் படங்களுக்கான சென்சாரை நிறுத்தி வைத்தனர்.
உங்கள் மீது விழுந்த கவர்ச்சி முத்திரையால் வருத்தமா?
இல்லவே இல்லை. ஒரு நடிகை என்றால் இப்படித்தான் என்ற பார்வை விழும். அதை மாற்றவே முடியாது. அம்மா வேடம், குணச்சித்திர வேடம் என்று எல்லா வித வேடங்களிலும் நடித்துள்ளேன்.
அரசியல் அழைப்பு வந்ததா?
இன்னும் எதுவும் வரவில்லை. ஆனால் அரசியலுக்கு வர ஆவலாக இருக்கிறேன். அழைப்பு வந்தால் செல்வேன்.
திருமணம் செய்யாமலேயே இருக்க திட்டமா?
திருமண வாழ்க்கை என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் எனக்கு அமையவில்லை. திருமண விஷயத்தில் சிலரால் ஏமாற்றப்பட்டேன்.
இவ்வாறு பேட்டியளித்தார்.
x