தேர்தலில் மகளுக்கு ஆதரவாக களமிறங்கும் சத்யராஜ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவர் அரசியலில் இறங்க இருப்பதாகவும் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதுகுறித்து நாம் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் அவர் மகள் திவ்யா சத்யராஜும் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு,

என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்.” இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ் கூறும்போது, அப்பா என் உயிர் தோழன் என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், I am a selfmade independent person, சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்’ என்று திவ்யா சத்யராஜ் கூறினார்.
சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி” என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் திவ்யா சத்யராஜ் எந்த கட்சி சார்பாக போட்டியிட போகிறார் என்ற விவரத்தை வெளியிட இருக்கிறார்.