மோஷன் போஸ்டரை வெளியிட்ட போனி கபூர்…. கடுப்பான அஜித் ரசிகர்கள்

புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘டைனோசர்ஸ்’. இவர் இயக்குநர் சுராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது ஒரு கேங்ஸ்டர் கதை. இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள் தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ‘டைனோசர்ஸ்’ என்று  ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவையாம்.

இந்தப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல  சினிமா தயாரிப்பாளர்கள் பத்து பேரும்  முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்றிருக்கிறார்கள். இப்படி இப்படத்தில் 130 பேர் நடித்துள்ளார்களாம்.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதேபோல் அவரது மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ‘டைனோசர்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்ட தவிர மத்த எல்லா அப்டேட்டும் கொடுக்குறீங்களே, ஏன் எங்கள சோதிக்கிறீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.