விவசாயிகள் பாதிக்கப்படுவதை பார்த்து மிகவும் வேதனை அடைகிறேன்: நடிகர் தர்மேந்திரா

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த வாரம் பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், “விவசாயிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என பதிவிட்டு இருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார். எனினும் ஒருவர் அதை ஸ்கிரின்ஷாட் எடுத்து, இதை ஏன் நடிகர் நீக்க வேண்டும் என ஆச்சரியம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த நடிகர் தர்மேந்திரா, “இதுபோன்ற கருத்துகள் வந்து என்னை சோகப்படுத்தும் என்பதால் தான் அந்த பதிவை நீக்கி இருந்தேன். உங்கள் மன திருப்திக்கு நீங்கள் என்னை வசைபாடலாம். நீங்கள் மகிழ்ச்சி அடைவது எனக்கு சந்தோஷம் தான். ஆம், நான் எனது விவசாய சகோதரர்களுக்காக வருந்துகிறேன்“ என கூறியிருந்தார். இந்தநிலையில் நடிகர் தர்மேந்திரா மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார். அதில் அவர், “எனது விவசாய சகோதரர்கள் பாதிக்கப்படுவதை பார்த்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். அரசு எதையாவது வேகமாக செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகர் தர்மேந்திராவின் மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி பா.ஜனதா எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.