மனோரமாவின் பயோபிக்கில் நடித்து தேசிய விருது வாங்க ஆசை – ஐஸ்வர்யா ராஜேஷ்

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில், 2 சிறுவர்களுக்கு தாய் வேடத்தில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர், ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தர்மதுரை, வடசென்னை, செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டுப் பிள்ளை என அவர் நடித்த படங்களும், கதாபாத்திரங்களும் பேசப்பட்டன.

அடுத்து அவர் நடித்து வெளிவர இருக்கும் படம், ‘பூமிகா’. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கி உள்ளார். கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இதில் நடித்தது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: “இது, எனக்கு 25-வது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம். இயக்குனர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஒரு நல்ல நண்பர். திறமையான இயக்குனர். பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், பூமிகாவும் ஒன்று. படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது.

இரவு-பகலாக வேலை செய்து, 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டோம். வரலாற்று படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக, மனோரமாவின் பயோபிக் படத்தில் நடித்து, தேசிய விருது பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது, என் நீண்ட கால ஆசை. நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன்.” இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.