புதிய தொழில் தொடங்கிய சமந்தா

சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

திருமணமான பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “எனக்கு ஸ்டைலான ஆடைகளை உடுத்த மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் ஸ்டைல் நடிகை என்றால் சமந்தாவை சொல்லலாம் என்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே உடை விஷயத்தில் பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்க காரணம் பேஷன் மீது எனக்கு இருக்கும் இஷ்டம்.
அந்த விருப்பத்தை நான் சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்று தொடங்கி உள்ளேன். இது எனது கனவு. சில மாதங்கள் முயற்சி செய்து இப்போதுதான் அதனை நிறைவேற்றி உள்ளேன். பேஷன் துறையில் எனக்கு இருக்கும் காதல், மோகத்துக்கு இந்த தொழில் உதாரணமாக இருக்கும். நடிகையாகும் முன்பே பேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. தொழில் தொடங்கி இருக்கும் சந்தோஷத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.” இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.