இசை பாலகனுக்கு இசைஞானியின் அன்பு பரிசு

லிடியன் நாதஸ்வரம், தனது 15 வது பிறந்தநாளையொட்டி இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற போது அவருக்கு நாதஸ்வரம் ஒன்றை பரிசாக இசைஞானி வழங்கியுள்ளார்.

சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்தி உலகளவில் கவனம் ஈர்த்தார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். அந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம் பரிசுத்தொகையை வென்றார்.

2 வயது முதல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய லிடியன், தற்போது மொசார்ட், பீதோவன் ஆகியோரின் இசைக்குறிப்புகளை பியானோவில் நன்கு வாசிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்கமுடியும். பல நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்தச் சிறுவயதில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாமல் 1-ம் வகுப்பு முதல் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வி கற்று வருகிறார். இவருடைய அக்கா அமிர்த் வர்ஷினியும் இசைக்கலைஞர். அவரும் பள்ளிக்குச் செல்லாமல் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வியைப் பயின்று வருகிறார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார்.

இளம் வயதில் இசையில் சாதனை படைத்து வருகிறார் லிடியன் நாதஸ்வரம். அதிவேகமாக பியோனா வாசிப்பதில் வல்லவரான இவர் மலையாளத்தில் மோகன்லாலின் 3டி படம் ஒன்றுக்கு இசையமைத்து வருகிறார்.

இளையராஜாவிடம் ஆசி :

செப்டம்பர் 6ம் தேதி தனது 15வது பிறந்தநாளை கொண்டாடிய லிடியன் நாதஸ்வரம், இளையராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார் லிடியன். அவருக்கு நாதஸ்வரம் ஒன்றை ஆசீர்வசித்து கொடுத்தார் இளையராஜா.

இதற்கிடையே, இந்தியில் லிடியன் நாதஸ்வரம் முதன்மை நாயகனாக நடித்துள்ள அத்கன் சத்கன் படம் ஓடிடியில் வெளியாகி பாராட்டை பெற்றுள்ளது. இசையில் சாதிக்க துடிக்க இளம் வயது கலைஞனாக நடித்துள்ளார். அவரின் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிக்கின்றன. அமிதாப் பச்சன், ரஹ்மான் உள்ளிட்டோர் இப்படத்தில் பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.