அதிர்ச்சி : ஹிந்தி நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் திடீர் மரணம்

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமும், நடிகருமான சித்தார்த் சுக்லா திடீர் மாரடைப்பால் காலமானார்.இவரின் வயது 40 என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மரணம் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவரான சித்தார்த் சுக்லா, மாடலிங் துறையிலும் ஹிந்தியில் சின்னத்திரையில் நடிகராக ஜொலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிகா வத்து என்ற தொடர் நாடகத்தின் மூலம் பிரபலமானதை தொடர்ந்து தில் சே தில் தக் உள்ளிட்ட பல தொடர் நாடகங்களில் நடித்தார்.

நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 13 சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னர் பட்டத்தினையும் பெற்றார். அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் தொடர்ந்து மாடலிங், வெப்சீரிஸ், ஆல்பம் என தனது துறையில் பிஸியாக இருந்தார். ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா என்ற படத்தில் நடித்துள்ளார். அதோடு 2005 இல் உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தையும் இவர் வென்றுள்ளார்.

பாலிகா வத்து என்ற தொடர் நாடகம் தமிழில் மண்வாசனை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு இங்கும் ஒரு டிவியில் ஒளிபரப்பானது. இதன்மூலம் இங்கும் அவருக்கு ரசிர்கள் அதிகமானார்கள்.

இந்நிலையில் இன்று காலை திடீரென சித்தார்த்திற்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டமையடுத்து மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம் வயதில் சித்தார்த் சுக்லா மரணத்தை தழுவியது ஹிந்தி சின்னத்திரை மற்றும் அவரின் ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.