மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வாழ்த்திய நாமல்

பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பயோபிக்குகள் எடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக கிரிக்கெட் வீரர்களான தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பயோபிக்குகள் வரிசை நீண்டுகொண்டே செல்கிறது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவிருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்சேவின் மகனும், இலங்கை மத்திய அமைச்சராகப் பதவி வகிப்பவருமான நமல் ராஜபக்சே இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ இல் விஜய்சேதுபதி நடிக்க ஒத்துக்கொண்டிருப்பது என்பது ஒரு பெரிய செய்தி. இவ்வளவு பெரிய திறமை வாய்ந்த நடிகர் நம் கிரிக்கெட் லெஜண்டின் பயோபிக்கில் நடிப்பதே சரியானது. இந்தப் படத்திற்காக அவருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.