#ValimaiFirstLook டுவிட்டரை ஆக்கிரமித்த வலிமை ரசிகர்கள்

நடிகர் தல அஜித் இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் குறித்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆணடிலேயே தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் ஆரம்பித்த பின்னர் நாட்டில் ஊரடங்கு காரணமாக வலிமை (Valimai) திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

அஜித் பிறந்த நாளான கடந்த மே 1 ஆம் திகதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று போனி கபூர் அறிவித்த நிலையில், கொரோனா பெருந்தொற்றால் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகாது என தெரிவித்து குறித்த ஃபர்ஸ்ட் லுக் இன்னொரு நாள் வெளியிடப்படும் என ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் என்று எழுதிய பதாகைகளை தூக்கிக்காட்டியது மற்றும் இன்றி, பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில், அஜித்தின் வலிமை திரைப்பட அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் தல ரசிகர்கள் #ValimaiFirstLook என்ற ஹாஷ்டேஹை டுவிட்டரில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

வலிமை திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே திரைப்படத்திற்கான விருப்பத்தை ரசிகர்கள் BMS app என்ற செயலியில் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இதில் திரைப்பட சீட்டுகளை பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருப்பது சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாகும். தற்போது அதையும் பதிவிட்டு அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.