மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று எளிமையாக நடைபெற்றது

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மேக்னா ராஜ் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் மேக்னா ராஜை நிலைகுலைய வைத்தது.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து நேற்று நடிகை மேக்னாராஜிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் பேனர், மேக்னா ராஜ் அமர்ந்திருந்த நாற்காலி அருகே வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.