ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் 2020 நான்காம் காலாண்டின் செயற்பாட்டு இலாபம்

ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமம், 2020 நிதியாண்டை சிறந்த நிதிப் பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலால் பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% வளர்ச்சியைப் பெற்று ரூ. 7.9 பில். ஆக பதிவாகியிருந்தது. குழுமத்தின் வருமானம் ரூ. 91.1 பில்லியனாக அதிகரித்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6% வளர்ச்சியாகும். இதில் fibre விரிவாக்கம் மற்றும் மொபைல் புரோட்பான்ட் சேவைகளின் வளர்ச்சி அடங்கலாக, புரோட்பான்ட் பிரிவினூடாக கிடைத்திருந்த வருமானம் உயர்ந்தளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. PEOTV மற்றும் carrier business சேவைகளுக்கான வருமானமும் குறித்த நிதியாண்டில் அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

SLTகுழுமம் தனது EBITDA (Earnings Before Interest, Tax, Depreciation and Amortisation)ஐ முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% இனால் அதிகரித்து ரூ. 34.7 பில்லியனாக பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டில் பதிவு செய்திருந்த 35% எனும் EBITDA எல்லைப் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டு 38% ஐ பதிவு செய்திருந்தது. வெற்றிகரமான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக இந்தப் பெறுமதிகளை எய்தக்கூடியதாக இருந்தது.

2020 நான்காம் காலாண்டின் குழுமத்தின் வருமானம் முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4% இனால் அதிகரித்து ரூ. 24.0 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2020 நிதியாண்டில் பதிவு செய்திருந்த உயர் காலாண்டு வருமானத்தை பதிவு செய்திருந்தது. குறித்த காலாண்டுக்கான செயற்பாட்டு இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 27% இனால் அதிகரித்து ரூ. 1.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2020 மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 33% வீழ்ச்சியாகும். காலாண்டுக்கான குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 1.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 48% வீழ்ச்சியாகும். உயர் செயற்பாட்டு செலவுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் அசாதாரண பெறுமதி ஏற்றத்தாழ்வுகள் போன்றன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன.

SLT குழுமத்தின் மொபைல் பிரிவான மொபிடெல் (பிரைவட்) லிமிடெட், 2020 ஆம் ஆண்டில் பாரதூரமான பெரும் பொருளாதாரச் சூழ்நிலைகள் காணப்பட்ட போதிலும், அதன் வருமானத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. வருமானத்தின் வளர்ச்சி மற்றும் செயற்பாட்டு செலவீனத்தை கட்டுப்படுத்தியது போன்றவற்றை ஒரே வேளையில் அமுல் படுத்தியதினுடாக உறுதியான இலாபகரமான வளர்ச்சியை மொபிடெல் பதிவு செய்திருந்தது. 2020 நிதியாண்டில் மொபிடெலின் வருமானம் ரூ. 43.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 2019 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 8% வளர்ச்சியாகும். வருமானத்தில் வளர்ச்சி மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் ஆகியவற்றின் பின்னணியில் மொபிடெலினால் சகல இலாபமீட்டும் குறிகாட்டிகளிலும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்தது.

EBITDA இல் நிறுவனம் 3.1 பில்லியன் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23% வளர்ச்சியாகும். 2020 நிதியாண்டில் EBIT பெறுமதி ரூ. 2.6 பில்லியனினால் அதிகரித்திருந்தது. இது 2019 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 50% வளர்ச்சியாகும். 2020 நிதியாண்டில் மொபிடெல் இதுவரை காலத்திலும் பதிவு செய்திருந்த தனது உயர்ந்த வரிக்கு பிந்திய இலாபமான ரூ. 4.9 பில்லியனை மொபிடெல் பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54% அதிகரிப்பாகும். 2020 நிதியாண்டில், குழுமத்தினால் மொத்தமாக 17.1 பில்லியன் ரூபாய் நேரடி மற்றும் மறைமுக வரியாக இலங்கை அரசாங்கத்துக்கு செலுத்தப்பட்டிருந்தது.

SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “எமது 2020 நிதிப் பெறுபேறுகளினூடாக, கொவிட் தொற்றுப் பரவலுடன் எழுந்த நெருக்கடியான சூழ்நிலைகளின் போதும், நாட்டின் தொலைத்தொடர்பாடல் சேவைகள் மற்றும் சமூகத்துக்கு SLT குழுமத்தினால் வழங்கப்பட்டிருந்த மீண்டெழல் மற்றும் வெற்றிகரமான செயற்பாடு போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும், நாட்டுக்கு தடங்கலில்லாத சேவைகளை வழங்க பங்களிப்பாற்றிய எமது முன்னிலைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதியான உதவிகளையும் நான் பாராட்டுவதுடன், தேசத்தினை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயலாற்றவும் எதிர்பார்க்கின்றேன். 2021 ஆம் ஆண்டில், எமது சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவதுடன், எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் யுத்திகளை வலிமைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவோம்.” என்றார்.

SLT குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டை நாம் எமது வர்த்தக நாம ஒன்றிணைப்பான SLT- MOBITEL உடன் ஆரம்பித்திருந்தோம். SLT குழுமத்தின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணமாகும். SLT மற்றும் மொபிடெல் இணைந்து, சந்தையில் எமது வர்த்தக நாமப் பிரசன்னத்தை மேம்படுத்த முடிந்துள்ளதுடன், சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஏதுவாக அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், SLT-MOBITEL இனால் முன்- வணிக 5G சேவைகளை 3.5 GHz ஐ பயன்படுத்தி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குழுமத்தில் புத்தாக்கங்களை துரிதப்படுத்துவதற்காகவும், சந்தையில் எமது உயர்ந்த ஸ்தானத்தை பேணுவதற்காகவும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையமொன்றை நாம் நிறுவியுள்ளோம்.” என்றார்.

SLT பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர் எனும் வகையில், பின்தங்கிய பிரதேசங்களுக்கும் எமது சேவைகளை வழங்குவது தொடர்பில் நாம் கவனம் செலுத்துகின்றோம். அதனூடாக அரசாங்கத்தின் முயற்சியான, நகர மற்றும் கிராமிய பகுதிகளுக்கிடையே காணப்படும் டிஜிட்டல் பாகுபாட்டை குறைக்க பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கின்றோம். தொற்றுப் பரவலின் போது, SLT குழுமத்தினால் சமூகத்தாருக்கு தடங்கலற்ற சேவை வழங்கப்பட்டது. குறிப்பாக மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகளை தொடர்வதற்கான பக்கேஜ்களும், வீட்டிலிருந்து பணியாற்றுவோருக்கு வசதியாக டேட்டா வசதிகளும் வழங்கப்பட்டிருந்தன. வியாபார சமூகத்தின் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில், வாடிக்கையாளர் சேவைகள், ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள் மற்றும் விவசாய தயாரிப்புகளுக்கான வியாபார கட்டமைப்புகள் போன்ற பலதுக்கு பல டிஜிட்டல் நாளிகைகளை அறிமுகம் செய்திருந்தோம். பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், SLT-MOBITEL, இலங்கை போக்குவரத்து சபையின் Park & Ride நகரப் பேருந்து சேவையுடன் கைகோர்த்திருந்தது. உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் அடங்கலாக பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தது.” என்றார்.

மேலும், “உலகுடன் எம்மை இணைத்துள்ள கடலுக்கடியிலான ஐந்து கேபள்களுக்கு மேலதிகமாக, எதிர்வரும் SEA-ME-WE 6 கடலுக்கடியிலான கேபள் கட்டமைப்புடன் 2021 இல் இணைப்பை ஏற்படுத்துவதற்கு நாம் முதலீடுகளை மேற்கொள்வோம் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம்.” எனவும் குறிப்பிட்டார். மொபிடெல் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரன கருத்துத் தெரிவிக்கையில், “2020 ஆம் ஆண்டு எதிர்பாராத மற்றும் பாரதூரமான சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தோம். உலகப் பொருளாதாரத்தையும் பாதித்திருந்ததுடன், இலங்கை போன்ற

நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான நெருக்கடியான சூழலிலும் மொபிடெல் இயங்கியிருந்ததுடன், 27 வருட காலப்பகுதியில் சிறந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இலங்கையை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கமைய, கிராமிய இணைப்புத் தீர்வுகளை வழங்கும் நடவடிக்கைகளில் மொபிடெல் துரிதமாக ஈடுபட்டது. தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் உணரப்பட்ட ஆண்டில், எமது சிறந்த தொழில்நுட்ப தீர்வுகளை சகல இலங்கையர்களும் அனுபவிக்கக்கூடிய வகையில் விஸ்தரித்திருந்தோம்.” என்றார்.

x