கடதாசியற்ற பண காசோலை வைப்புக்களுக்காக e-slips அலைபேசிச் செயலியை அறிமுகம்

கடதாசிகளின் பயன்பாடின்றி பணமும் காசோலைகளும் கொமர்ஷல் வங்கியின் நடைமுறை சேமிப்புக் கணக்குகளில் இப்போது வைப்பிலிடப்பட முடியும். இலத்திரனியல் பத்திரங்களை e-slips உருவாக்கக்கூடிய புத்தாக்கமான அலைபேசிச் செயலியொன்று வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காசோலை வைப்புக்களுக்காக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது செயலி இதுவென்பதோடு புதிய சூழலில் வாடிக்கையாளர்களின் சௌகரியத்தைக் கணிசமானளவு இது மேம்படுத்துகிறது என வங்கி தெரிவித்தது.

கொமர்ஷல் வங்கியின் e-slips செயலியானது வாடிக்கையாளர்கள் தமது அலைபேசிகளில் பண காசோலை வைப்புக்களுக்காக இலத்திரனியல் வைப்புக்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது.

App Store அல்லது Google Play Store இலிருந்து இச்செயலியை இலவசமாகத் தரவிறக்க முடியும். ஆங்கிலம் சிங்களம் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் செயற்படுத்தப்படக்கூடிய இச்செயலி அன்ட்ரொய்ட் iOS கருவிகளுக்காகப் பயன்படுத்தப்பட முடியும். இச்செயலியைப் பயன்படுத்தி எவரும் இப்போது கடதாசிப் பயன்பாட்டையும் கடித உறைப் பயன்பாட்டையும் இல்லாது செய்து வங்கியின் பசுமை முன்னெடுப்புக்கு ஆதரவளிக்க முடியுமென வங்கி தெரிவித்தது.

சுற்றுச்சூழல் தொடர்பாக அக்கறை கொண்ட வாடிக்கையாளர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டுள்ள இச்செயலியில் வங்கிக்கு வருவதற்கு முன்பதாகவே பண வைப்புக்களுக்காகத் தமது இலத்திரனியல் பத்திரங்களை டிஜிட்டல் முறை மூலமாக நிரப்புவதன் மூலமோ அல்லது காசோலையின் குறுக்கே ´Com e-Cheque´ என எழுதி அக்காசோலையைப் புகைப்படம் பிடிப்பதன் மூலமாகவோ தமது நேரத்தை வாடிக்கையாளர்கள் மீதப்படுத்திக் கொள்ள முடியும். அத்தோடு வங்கிப் பத்திரங்களின் பற்றுச்சீட்டுக்களை வாடிக்கையாளர்கள் சேமித்து வைப்பதை விட தமது வைப்புக்கள் அனைத்தையும் செயலியில் ஒரே இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

e-Cheque செயலி மூலமாக ஒரு நேரத்தில் ஒரு காசோலையை மாத்திரம் வாடிக்கையாளர்கள் வைப்பிலிட முடியமென்ற போதிலும் ஒரு நாளில் எத்தனை தடவைகளும் அது மேற்கொள்ளப்பட முடியும் என வங்கி தெரிவித்தது. இரண்டு மில்லியன் ரூபாய் வரை பெறுமதியான காசோலைகளை இச்செயலி மூலமாக வைப்பிலிட முடியும். சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடுவதாயின் 200,000 ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியைக் கொண்ட காசோலையையும் நடைமுறைக் கணக்காயின் 500,000 ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியைக் கொண்ட காசோலையையும் வைப்பிடும்போது அப்பரிமாற்றத்துக்கான நோக்கத்தையும் செயலியில் குறிப்பிட வேண்டும்.

வெற்றிகரமான பரிமாற்றத்தின் பின்னர் பிறப்பிக்கப்படும் இலத்திரனியல் பற்றுச்சீட்டானது QR குறியீடு ஒன்றையும் குறிப்பு இலக்கமொன்றையும் கொண்டிருக்கும். அத்தோடு குறித்த காசோலையின் புகைப்படமொன்றுடன் இத்தகவல்கள் மூன்று மாத காலத்துக்கு அச்செயலியில் சேமித்து வைக்கப்படும்.

இலங்கையில் பசுமைக் கருத்துருவாக்கங்களையும் பசமைக் கட்டட நடவடிக்கைகளையும் அமுல்படுத்துவதில் முன்னணி நிறுவனமான இலங்கை பசுமைக் கட்டடச் சபையால் Green Building Council of Sri Lanka GBCSL 2019ஆம் ஆண்டில் கொமர்ஷல் வங்கிக்கு வங்கித் துறையில் அதிசிறந்த பசுமை அர்ப்பணிப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. சூழலுக்கு நேயமான செயற்பாடுகளில் வங்கியின் முன்னேற்றங்களை அங்கீகரித்து இது வழங்கப்பட்டிருந்தது.

அதேபோல் சேமிப்பு நடைமுறை தனிப்பட்ட வணிக வெளிநாட்டு நாணயக் கணக்குகள் கடனட்டைப் பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றின் தகவல்களை வழங்குவதற்காக அன்ட்ரொய்ட் iOS அலைபேசிகளுக்காக e-Passbook ஒன்றைத் தனது வாடிக்கையாளர்களுக்காக 2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய கொமர்ஷல் வங்கி இலங்கையில் அவ்வாறான வசதியை வழங்கிய முதலாவது வங்கியாகமாறி புதிய வரலாறு படைத்திருந்தது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 2020ஆம் ஆண்டு வங்கி அதன் 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 880 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.

x