இலங்கை கிரிக்கெட்டின் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு உத்தியோகபூர்வ அனுசரணையாளராக JAT Holdings நியமிப்பு

2020/2021 கிரிக்கெட் பருவகாலத்தின் போது “இலங்கை கிரிக்கெட்டின் வெளிநாட்டு சுற்றுலாவின் போது அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக” செயற்பட JAT Holdings (Pvt) Ltd நியமிக்கப்பட்டுள்ளது. மரப் பூச்சுகள் தொழிற்துறையில் எவ்விதமான சந்தேகங்களுமின்றி சந்தையில் முன்னிலை வகிக்கின்ற, முற்றிலும் உள்நாட்டு வர்த்தகநாமமான இது, ITW Consulting (ITW) உடன் மேற்குறிப்பிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனுசரணைக்காக இலங்கை கிரிக்கெட்டால் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தம் கோரல் விண்ணப்பங்களைத் தொடர்ந்து இதற்கான உரிமையை ITW பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது என்பதுடன், இலங்கை கிரிக்கெட்டால் வழங்கப்பட்ட ஏனைய பல்வேறு அனுசரணைகள், விளம்பரப்படுத்தல் மற்றும் வர்த்தகநாம ஊக்குவிப்புச் செயற்பாடுகளுக்கான உரிமைகளையும் அது கொண்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, 2020/2021 கிரிக்கெட் பருவகாலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் விளையாடவுள்ள போட்டித் தொடர்களுக்கான அனுசரணையை இந்நிறுவனம் வழங்கும்.

இந்த பருவகாலத்தில் பங்கேற்கவுள்ள போட்டிகளில், தென்னாபிரிக்காவிற்கான இலங்கை அணியின் சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன, அவை 2020 டிசம்பர் 26 மற்றும் 2021 ஜனவரி 7 ஆம் திகதிகளில் நடைபெறும் வகையில் பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதேபோல், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இலங்கையில் இடம்பெறும் தொடரின் கீழ் 2 டெஸ்ட் போட்டிகள் 2021 ஜனவரி 14 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது 3 ஒரு நாள், 3 இருபதுக்கு இருபது மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளும் மார்ச் 2021 இல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட பருவகாலத்தின் போது தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுலா மற்றும் இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுலாவின் போது ‘இலங்கை கிரிக்கெட்டின் வெளிநாட்டு சுற்றுலாவின் போது அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக’ JAT செயற்படவுள்ளது.

இந்த கடினமான காலகட்டங்களில், இலங்கையின் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊக்குவிப்பு மற்றும் விளம்பரப்படுத்தல் சார்ந்த ஆர்வங்களை மறுசீரமைத்து, பாரிய மட்டத்திலான இத்தகைய வணிகத் தீர்மானங்களிலிருந்து விலகிச் சென்றுள்ள நிலையில், JAT Holdings இதனை தைரியத்துடன் கையில் எடுத்துள்ளது.

உட்புறங்களுக்கும், வெளிப்புறங்களுக்கும் பூசக்கூடிய பிரிலியன்ட் வைட் எமல்ஷன் தீந்தை (brilliant white emulsion) உற்பத்தி வரிசையான “WHITE by JAT” ஐ அண்மையில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்த அனுசரணையானது தற்போதைய உலக சந்தை நிலைமைக்கு மத்தியிலும், நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு மற்றொரு பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.

இந்த கூட்டாண்மை தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு ஆஷ்லி டி சில்வா அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில், “தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப்பயணம் மற்றும் இங்கிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் ஆகியவற்றின் போது இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்த்து, “இலங்கை கிரிக்கெட்டின் வெளிநாட்டு சுற்றுலாவின் போது அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக” உள்நாட்டு மற்றும் தனியார் உரிமையாண்மையைக் கொண்ட ஒரு வர்த்தகநாமமாக JAT Holdings எம்முடன் இணைந்துள்ளமை பெருமகிழ்ச்சியளிக்கின்றது. கூட்டாண்மைகளே கிரிக்கெட்டினை மேம்படுத்த வழிகோலுவதுடன், இந்த கூட்டாண்மையானது வளர்ச்சி கண்டு, மேம்பட்டு, JAT நிறுவனம் தனது வர்த்தநாமத்தினை சர்வதேச அளவில் பெரும் அங்கீகாரம் பெற்ற ஒன்றாக மாறுவதற்கு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் என நான் உறுதியாக நம்புகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.

இந்த அனுசரணை தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய JAT Holdings (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஈலியன் குணவர்த்தன அவர்கள், “ஒரு உள்நாட்டு மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிறுவனம் என்ற வகையில், இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு அனுசரணையை வழங்குவது எமக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. இது JAT இல் எம் அனைவருக்கும் மிகுந்த பெருமை உணர்வைத் தோற்றுவிப்பதுடன், எதிர்வரும் சுற்றுப்போட்டிகளில் வெற்றிகளை ஈட்டுவதற்கு அணிக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் சமூகத்திற்கு பிரதியுபகாரம் செய்யும் வழிமுறைகளை JAT Holdings தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், விளையாட்டுத்துறையானது எப்போதும் கவனம் செலுத்தப்படும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிவடைந்த எல்பிஎல் 2020 போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் கிரிக்கெட் அணிக்கு அனுசரணையை வழங்கி, இப்போட்டித்தொடரில் அவ்வணிக்கு அனுசரணை வழங்கிய ஒரேயொரு இலங்கை நிறுவனமாக JAT செயற்பட்டிருந்தமை எமது கவனத்தை இன்னும் தெளிவாகப் புலப்படுத்துகிறது,” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “உண்மையான விளையாட்டு மனப்பாங்கு அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு மொழி. விளையாட்டு நிகழ்வுகள் மனிதர்களை முழுமையான பண்புடையவர்களாக மாற்றுவதுடன், பின்னணி வேற்றுமைகளுக்கு மத்தியிலும் நாடுகள், இனங்கள் மற்றும் மதங்களை ஒன்றிணைக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை,” என்று குறிப்பிட்டார்.

இந்த கைகோர்ப்பு குறித்து ITW Consulting இன் முகாமைத்துவப் பணிப்பாளரான பைரவ் சாந்த் அவர்கள் கூறுகையில், “ITW பொதுவாக எப்போதுமே, உலக அளவில் விளையாட்டின் திறனை, அதிலும் குறிப்பாக கிரிக்கெட்டின் திறனை நம்புகிறது. இது எங்களுக்கு ஒரு உற்சாகம் தரும் சங்கமிப்பாக அமைந்துள்ளது, ஏனென்றால் இங்கு கிரிக்கெட் விளையாட்டோடு எங்களுக்கு நீண்ட கால தொடர்பு இருப்பதால், இலங்கை கிரிக்கெட் கொண்டுள்ள திறமையின் சாத்தியங்கள் குறித்து உற்சாகமாக இருக்கிறோம். இலங்கையில் மிகவும் பிரபலமான விளையாட்டைக் கொண்டாட நாட்டின் மிக நம்பகமான இரண்டு பெயர்கள் ஒன்றாக கைகோர்த்துள்ளமையால் இந்த உடன்படிக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது. இந்த சங்கமிப்பின் மூலம், இலங்கை கிரிக்கெட் ஒரு அற்புதமான புதிய சகாப்தத்தில் காலடியெடுத்து வைக்க இடமளிப்பதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் பிரதான அனுசரணையாளராக செயற்பட்டதில் இருந்து, ஒரு நாள் மற்றும் ஏனைய பல இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்கு இணை அனுசரணை வழங்கி, சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு JAT Holdings எப்போதும் அனுசரணையளித்து வந்துள்ளது. விளையாட்டு மூலம் சமூகங்களை ஒன்றிணைக்க முற்படும் ஒரு சமூக பொறுப்புணர்வு மிக்க ஸ்தாபனமாக, 2020/2021 கிரிக்கெட் பருவ காலத்திற்காக இலங்கை கிரிக்கெட்டிற்கான அனுசரணை இது போன்ற கூடுதல் முயற்சிகளுக்கு வழிவகுக்கும்.

x