அமானா வங்கியின் OrphanCare ஊடாக மற்றுமொரு காலாண்டுக்கான நிதி விநியோகம் பூர்த்தி 2800 க்கும் அதிகமான அநாதரவான சிறுவர்களுக்கு பயன்

அமானா வங்கியின் சர்வதேச ரீதியில் விருது வென்ற OrphanCare திட்டத்தினூடாக, தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும், 2800 க்கும் அதிகமான அநாதரவான சிறுவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நிதி விநியோகம் 2020 நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாட்டில் தற்போது நிலவும் கொவிட்- 19 தொற்றுப் பரவலுடனான சூழலிலும், வங்கி தொடர்ச்சியாக தனது நிதி விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததுடன், அனுகூலம் பெறுவோரின் எண்ணிக்கையையும் அதிகரித்திருந்தது. இதனூடாக OrphanCare திட்டத்தில் அதிகளவு நாட்டத்தை காண்பிக்கின்றமை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கியின் முன்னணி சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமாக அமைந்துள்ள OrphanCare, சுயாதீன நம்பிக்கை நிதியமாக நிறுவப்பட்டுள்ளதுடன், அதனூடாக சமூகத்தில் அதிகளவு அக்கறை செலுத்தப்படாத, அநாதரவான சிறுவர்களுக்கு கைகொடுத்து உதவும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 18 வயதை பூர்த்தி செய்ததும், தமது காப்பகங்களிலிருந்து வெளியேறும் குறித்த கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. “இரண்டாம் கைதுறப்பு” என யுனிசெவ் அமைப்பினால் குறிப்பிடப்படும், இந்தப் பிரச்சனை, தமது சிறுபராயத்தில் கைவிடப்பட்ட அநாதரவான சிறுவர்கள் தற்போது குறித்த வயதைப் பூர்த்தி செய்து, காப்பகத்தின் பராமரிப்பிலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ள மற்றுமொரு சவாலாக அமைந்துள்ளது. அவர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனையாக நிதியைக் கொண்டிராமை தொடர்பில் வங்கி கவனம் செலுத்தியுள்ளது. அதற்காக OrphanCare நம்பிக்கை நிதியத்தினூடாக, குறித்த அநாதரவான சிறுவர்களின் கணக்குகளில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரையில் குறிப்பிட்ட தொகை வைப்புச் செய்யப்படுகின்றது. அவர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்ததும், அந்தப் பணத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்தத் திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில், நிர்வாக மற்றும் செயற்பாட்டு செலவுகள் அனைத்தையும் அமானா வங்கி பொறுப்பேற்றுள்ளமையால், நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், அனுகூலம் பெறுநரைச் சென்றடைவதாகும்.

இந்த நிதிப் பகிர்ந்தளிப்பு தொடர்பில் OrphanCare இன் தலைமை அதிகாரி அசாட் சஹீட் கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப் பரவலின் இரண்டாம் அலையின் தாக்கத்தினால் எழுந்துள்ள சவால் நிறைந்த சூழலிலும், அனுகூலம் பெறும் கணக்குகளுக்கு எம்மால் தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாகவும் நிதியை பகிர முடிந்துள்ளது என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். எமக்கு தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கி வரும் எமது எண்ணற்ற நன்கொடை வழங்குநர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளதுடன், அவர்கள் இந்தப் பணியை தொடர்ந்து முன்னெடுக்க ஆதரவு வழங்குகின்றனர். அத்துடன், எமது நம்பிக்கை காப்பாளர் சபையின் வழிகாட்டலையும் நாம் பாராட்டியாக வேண்டும். 650 க்கும் அதிகமான நன்கொடையாளர்களைக் கொண்டிருப்பதையிட்டு நாம் மிகவும் திருப்தியடைவதுடன், மாதாந்தம் தமது பங்களிப்பை வழங்கும் முகமாக தமது கணக்குகளில் நிலையான கட்டளையையும் நிறுவியுள்ளனர். சில வியாபார நிறுவனங்களும் OrphanCare நிதியத்துக்கு பங்களிப்புகளை வழங்கியுள்ளன” என்றார்.

நாட்டில் மொத்தமாக 14,000 க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட அநாதரவானவர்கள் காணப்படும் நிலையில், இதுவரையில் 82 காப்பகங்களைச் சேர்ந்த 2800க்கும் அதிகமான அநாதரவானவர்களை இந்தத் திட்டத்தில் உள்வாங்கியுள்ளதுடன், இத்திட்டம், நாட்டின் சகல அநாதரவானவர்களையும் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அநாதரவானவர்களை தெரிவு செய்யும் போது, சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் இரண்டாம் தீர்மானமான சிறுவர்களினது அல்லது அவர்களின் பெற்றோர்களினது அல்லது அவர்களின் பாதுகாவலரின் நிறம், இனம், பாலினம், மொழி, மதம், அரசியல், தேசிய, சமூக பின்புலம், சொத்துகள், அங்கவீனம் அல்லது பிறப்பு போன்ற எவ்வித விடயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

OrphanCare நிதியத்தின் நம்பிக்கை காப்பாளர்களாக சமூக சேவையில் ஆர்வமும் அனுபவமும் கொண்ட அணியினர் செயற்படுகின்றனர். நிதியத்தின் தவிசாளராக ருஸ்லி ஹுசைன் (இலங்கை Roteract அமைப்பின் ஸ்தாபகர்), ஒஸ்மான் காசிம் (அமானா வங்கியின் ஸ்தாபகர்), கே. ஆர். ரவிச்சந்திரன் (ரொட்டரி கழகத்தின் பணிப்பாளர் சபை தவிசாளரும், ரொட்டரி இன்டர்நஷனலின் முன்னாள் தலைவர்), ரொஹான் துடாவே – பொருளாளர் (துடாவே பிரதர்ஸ் தவிசாளர்), ஷராத் அமலீன் (இணை ஸ்தாபகர் MAS ஹோல்டிங்ஸ்), தையிப் அக்பரலி (சிரேஷ்ட பணிப்பாளர் அக்பர் பிரதர்ஸ்), ஹர்ஷ அமரசேகர (ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் சிஐசி ஹோல்டிங்ஸ் தவிசாளர்), ஜஸ்ரி மக்தொன் இஸ்மைல் (AAT முன்னாள் தலைவர்) மற்றும் மொஹமட் அஸ்மீர் (அமானா வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி) ஆகியோர் அடங்குகின்றனர். நிதியத்தின் நீண்ட கால நிலைத்தன்மையை பேணுவதற்காகவும் மற்றும் அதியுச்ச நேர்மைத்தன்மையை பேணுவதற்காகவும் அதற்கான ஒரு உறுதியான நிர்வாகக் கட்டமைப்பை காப்பாளர்கள் நிறுவியுள்ளனர்.

சஹீட் தொடர்ந்து குறிப்பிடுகையில், அனாதரவான சிறுவர் ஒருவரின் எதிர்காலத்துக்கு வளமூட்ட எதிர்பார்க்க நினைக்கும் அனைவரையும் இந்தத் திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறு நான் அழைக்கின்றேன். ஆர்வமுள்ளவர்கள் OrphanCare தொடர்பான தகவல்களை www.amanabank.lk/orphan-care எனும் இணையத்தளத்தினூடாக அல்லது 011 775 6 775 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும். www.bit.ly/orphan-care-video” இல் காணப்படும் ‘From Chance to Choice’ எனும் கதையை பார்வையிடுமாறும் நாம் அனைவரையும் வேண்டிக்கொள்கின்றோம்.” என்றார்.

x