கற்சுரங்க காணியில் எல்லைமீறல் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கையை Siam City சீமெந்து (லங்கா) லிமிடெட் முன்னெடுப்பு

வனாந்தர பாதுகாப்புக்கான அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுடனான அவசர சந்திப்பைத் தொடர்ந்து புத்தளம் சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த காணியில் முன்னெடுக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான எல்லைமீறல் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான தீர்மானம் சம்பந்தப்பட்ட சகல தரப்பினராலும் எய்தப்பட்டுள்ளது.

அருவக்காலு பகுதியில் அமைந்துள்ள 4450 ஏக்கர் வனாந்தரப்பகுதிரூபவ் 100 சதவீதம் உள்நாட்டு சீமெந்து உற்பத்தியாளரான Siam City சீமெந்து (SCCL) நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் ஒரே சகல வசதிகளையும் கொண்ட சீமெந்து உற்பத்தி ஆலைப்பகுதியில்ரூபவ் சீமெந்து உற்பத்திச் செயற்பாடுகளுக்கு அவசியமான சுண்ணாம்புக்கல் மூலப்பொருட்களை அகழ்ந்தெடுப்பதற்காக இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அருவக்காலு அகழ்வு நடவடிக்கைகளை இந்த காணிப்பகுதியில் SCCL நிறுவனம் முன்னெடுப்பதுடன் இதற்காக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் மத்திய சூழல் அதிகாரசபை (CEA) மற்றும் இலங்கை மாகாண சூழல் சட்ட (PEA) ஆகியவற்றிடமிருந்து முறையான செயற்பாட்டு அனுமதி அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. அகழ்வு செயற்பாடுகளின் பிரகாரம் சுரங்கப் பகுதிகளை மீள்நிரப்பி சீரமைத்து மற்றும் மீள் நடுகையை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை SCCL முன்னெடுக்கின்றது. வருடாந்தம் சுமார் 6000 தாவரங்கள் இந்த அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சுரங்கப்பகுதியில் பயிரிடப்பட்ட வண்ணமுள்ளன.

போதியளவு குறியீடுகள் மற்றும் எல்லை குறிப்புகள் இன்மையால் இந்தப் பகுதியைச் சூழ காணப்படும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அகழ்வுக்குட்படுத்தப்படாத பகுதிகளில் அத்துமீறும் சம்பவங்கள் கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெறுகின்றன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி அமைப்புகளிடம் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆகக்குறைந்தது முதல் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும் செப்டெம்பர் மாத முற்பகுதியில் சமீபத்திய அத்துமீறல் நடவடிக்கை காரணமாக வனாந்தரத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 29 ஏக்கர் காணிப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை பல ஆண்டு காலமாக தொழிற்படாத காடழிப்புக்கு உட்படாத பகுதியாக SCCL இனால் பேணப்பட்டு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி செப்டெம்பர் 7 ஆம் திகதி வனாதவில்லுவ பொலிஸ் நிலையத்தில் SCCL இனால் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செப்டெம்பர் 14 ஆம் திகதி வனாதவில்லுவ பொலிஸ் நிலையத்தில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இதில் வனாந்தர பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் பிரதேச செயலாளர் வனாந்தர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் பொது வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் பொது சூழல் அதிகார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வனாதவில்லுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதேச சபை தவிசாளர் சீமெந்து கூட்டுத்தாபன தவிசாளர் மற்றும் Siam City சீமெந்து தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் இதர அரசாங்க அமைப்புகளின் அதிகாரிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர் சி. பி. ரத்நாயக்கவின் வழிகாட்டலில் தற்போதைய குத்தகைதாரரான SCCL நிறுவனம் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்க்கும் வகையிலான சகல மற்றும் அவசியமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உடன்பட்டிருந்ததுடன் விஷமிகளால் ஊடுருவப்பட்ட பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உடன்பட்டிருந்தது. அழிக்கப்பட்ட வனாந்தரப் பகுதியை மீள புனருத்தாரணம் செய்வதற்கு SCCL நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன் சேதமடைந்த 29 ஏக்கர் காணியில் சுமார் 19000 தாவரக் கன்றுகளை உடனடியாக மீள பயிர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இந்த நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல பங்காளர்களுக்கும் அவ்வப்போது வெளிப்படையான அறிக்கையை வழங்கவும் உடன்பட்டிருந்தது.

எல்லைகளை அடையாளமிடுவதற்காக காணியை அளவிடும் பணிகளை செப்டெம்பர் 15 ஆம் திகதி SCCL உடனடியாக ஆரம்பித்திருந்தது. பகல் வேளைகளில் இந்தப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அதிகாரிகளை மோட்டார் சைக்கிள்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதுடன் ஆழமான கண்காணிப்பு செயற்பாடுகளுக்காக ட்ரோன் கமராக்கள் மூலமான கண்காணிப்புகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளது. காணிப்பகுதியில் எல்லைமீறுவோருக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையிலான அறிவுறுத்தல் பதாதைகளை காட்சிப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

கடந்த சில தசாப்த காலமாக புத்தளம் பகுதியில் உயர் சீமெந்து தொழிற்சாலையைக் கொண்டுள்ள SCCL, சூழவுள்ள சமூகத்தாருடன் வேலை வாய்ப்பு வலுவூட்டல் சமூக அபிவிருத்தி மற்றும் பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்களினூடாக உறுதியான உறவுகளை கட்டியெழுப்பியுள்ளது. இவற்றினூடாக புத்தளத்தின் அபிவிருத்திக்கு நிறுவனத்தினால் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. உயிரியல் பரம்பல் முகாமைத்துவத்துக்கும் பாதுகாப்புக்கும் நிறுவனம் உறுதியான அர்ப்பணிப்பை SCCL வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக சுரங்க அகழ்வு பகுதிகளில் புனருத்தாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தொடர்ச்சியாக உறுதி செய்கின்றது. இலங்கையின் சூழல் கட்டமைப்பை பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்கும் வகையில் தான் முன்னெடுக்கும் சுரங்க பகுதிகளில் மேற்கொள்ளும் புனருத்தாரண செயற்பாடுகளை கண்காணித்து அது தொடர்பில் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேலும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க SCCL தன்னை அர்ப்பணித்துள்ளது.