தேசத்துக்கு வலிமையூட்டும் இலங்கையின் படையணியினருக்கு INSEE சீமெந்து தொடர்ந்தும் நன்றி தெரிவிப்பு

இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, இலங்கையின் விமானப் படை மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களுக்கும், ஓய்வு பெற்ற மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கும் ரணவிரு சேவை அதிகார சபையினூடாக தொடர்ந்தும் சலுகை விலையில் INSEE சங்ஸ்தா சீமெந்தை வழங்க முன்வந்துள்ளது.

2020 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட முதற் கட்டத் திட்டத்தின் நீடிப்பாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், இலங்கையின் இராணுவ படையணியினருக்கு சங்ஸ்தா சீமெந்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

2020 டிசம்பர் 7 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மற்றும் ரணவிரு சேவை அதிகாரசபையின் தவிசாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு படைப்பிரிவின் சார்பாகவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களில், இலங்கை விமானப் படையின் நலன்புரிப் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் டி கே வணிகசூரிய, இலங்கை கடற்படை நலன்புரி பணிப்பாளர் கொமோடோர் பி என் விதானகே மற்றும் ரணவிரு சேவை அதிகாரசபையின் பணிப்பாளர் எஸ் பி வி எஸ் சுபசிங்க ஆகியோர் அடங்கியிருந்தனர். INSEE சீமெந்து நிறுவனத்தின் தவிசாளர் நந்தன ஏக்கநாயக்க, விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் நிறைவேற்று உப தலைவர் ஜான் குனிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நந்தன ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்களின் மிகவும் நன்மதிப்பை வென்ற வீடமைப்பு வர்த்தக நாமமான சங்ஸ்தா, நாடு முழுவதையும் சேர்ந்த படையணியினருக்கு உதவிகளை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், படையினருக்கு எமது நன்றியை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த திட்டமாக அமைந்துள்ளது. இலங்கையர்கள் மத்தியில் தேசிய உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டமாக இது அமைந்துள்ளது.” என்றார்.

நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில், படையணியினர் பெருமளவு பங்களிப்பை வழங்குகின்றமைக்கு INSEE சீமெந்து தமது நன்றியைத் தெரிவித்துள்ளது. முன்னிலைச் செயற்பாடுகளை தன்னலம் பாராமல் முப்படையினரும் முன்னெடுப்பதுடன், சகல பகுதிகளையும் சேர்ந்த இலங்கையர்களை பாதுகாக்கும் கடமையைச் செய்கின்றனர். பல சுமைகளையும் பொறுப்புகளையும் இவர்கள் கடந்து வந்துள்ளதுடன், சிவில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இன்று தொற்றுப் பரவல் என நாட்டுக்கு சவாலான சகல சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு கைகொடுக்கும் பணிகளை இவர்கள் முன்னெடுக்கின்றனர்.

ஏக்கநாயக்க தொடர்ந்து குறிப்பிடுகையில், “சேவையாற்றும், ஓய்வு பெற்ற மற்றும் அங்கவீனமுற்ற என அனைத்து படைத் தரப்பினருக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்காக எமது நன்றியை இது போன்றதொரு நெருக்கடி மிகுந்த தருணத்தில் வெளிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.” என்றார். சகல படையணியினருக்கும் INSEE சங்ஸ்தா சீமெந்தை நாடு முழுவதிலும் காணப்படும் நலன்புரி விற்பனை நிலையங்கள் மற்றும் முப்படை முகாம்கள் மற்றும் நிர்வாகப் பகுதிகளிலிருந்து சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.