அமானா வங்கி “ஆண்டின் சிறந்த நிறுவனம்” தங்க விருதை SLIBFI விருதுகள் நிகழ்வில் சுவீகரித்துள்ளது

அண்மையில் இடம்பெற்ற SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த நிறுவனம் எனும் விருது அடங்கலாக மூன்று தங்க விருதுகளை அமானா வங்கி சுவீகரித்திருந்தது. இந்த விருதுகளுக்கு KPMG மத்தியஸ்தம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு தடவை ஆண்டின் சிறந்த நிறுவனம் எனும் உயர் விருதை அமானா வங்கி வெற்றியீட்டியுள்ளதுடன், இரு தங்க விருதுகளையும் ஒரு சிறப்பு விருதையும் பெற்றுக் கொண்டது. இதனூடாக SLIBFI 2020 விருதுகள் வழங்கும் நிகழ்வில் அதிகளவு விருதுகளை சுவீகரித்த நிறுவனம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது. ஆண்டின் சிறந்த சமூக மேம்படுத்தல் திட்டம் என்பதற்கான தங்க விருது அமானா வங்கியின் OrphanCare திட்டத்துக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் திட்டத்துக்கான விருது அமானா வங்கியின் சேமிப்புத் திட்டத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அமானா வங்கியின் பிஸ்னஸ் ப்ளஸ் திட்டத்தை கௌரவிக்கு வகையில் ஆண்டின் சிறந்த நிதித் தீர்வு சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்த விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பாக பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த நிறுவன தங்க விருதை பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு நாம் உண்மையில் பெருமை கொள்கின்றோம். நாட்டில் பொருளாதார சவால்கள் காணப்படும் நிலையிலும் இலங்கையில் வளர்ச்சிக்கு வலுச்சேர்ப்பது மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டும் வகையில் வட்டி சாராத வங்கியியல் மற்றும் நிதியியல் துறையை கட்டியெழுப்புவதிலும் அதில் முன்னணியில் திகழ்வதற்கு காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை இந்த விருது உறுதி செய்துள்ளது. எம்மீது தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்துள்ள எமது சகல வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் மற்றும் இதர பங்காளர்கள் அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கின்றேன்.” என்றார்.

சமூக மேம்படுத்தலுக்காக தங்க விருதை வெற்றியீட்டியிருந்தமை தொடர்பில் அஸ்மீர் மேலும் தெரிவிக்கையில், “அமானா வங்கி முன்னெடுக்கும் OrphanCare ஊடாக பெருமளவு அநாதரவான சிறுவர்களுக்கு அனுகூலம் வழங்கப்படுகின்றமையை கௌரவித்து வழங்கப்பட்டுள்ள தங்க விருது, எம்மை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. எமது காப்பாளர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் விரும்புகின்றேன்.” என்றார். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 2800க்கு அதிகமான அநாதரவான சிறுவர்கள் இணைக்கப்பட்டுன்னதுடன் இது வரையில் அமானா வங்கி OrphanCare ஊடாக 5 தரவை நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (ISDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் உரிமம் கொண்டுள்ளது. ISDB குழுமம் என்பது ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கிக்கு எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் கிடையாது. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது.