200 ஆவது IT ஆய்வுகூடத்தை மாத்தறை ஜனாதிபதி வித்தியாலயத்துக்காக அன்பளித்தது கொமர்ஷல் வங்கி

இலங்கையில் கணினி அறிவு மட்டத்தை உயர்த்துவதற்காக கொமர்ஷல் வங்கியால் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமுதாய முன்னெடுப்பு 200 ஆவது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இவ்வாரத்தில் வங்கி அன்பளித்ததைத் தொடர்ந்து முக்கியமான மைல்கல்லொன்றை அடைந்துள்ளது. தனது 100 ஆவது ஆண்டு நிறைவை இவ்வாண்டில் வங்கி கொண்டாடும் நிலையிலேயே இம்மைல்கல்லும் அடையப்பட்டுள்ளது.

தேவையான அனைத்துக் கருவிகளையும் தளபாடங்களையும் உள்ளடக்கிய இந்தத் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடமானது மாத்தறை ஜனாதிபதி வித்தியாலயத்துக்கு வழங்கப்பட்டது. இப்பாடசாலைக்கு விஞ்ஞான தொழில்நுட்ப பொறியியல் கணித (STEM) வகுப்பறையொன்றும் இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியால் அன்பளிக்கப்பட்டது.

கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. தர்ம தீரசிங்கவால் இந்த ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டதோடு இந்நிகழ்வில் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. சனத் மனதுங்க வங்கியின் கூட்டாண்மைப் பொறுப்பு அறக்கட்டளையின் அறங்காவலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வங்கியின் கூட்டாண்மைப் பொறுப்பு அறக்கட்டளையின் மீச்சிறப்பு (flagship) கூட்டாண்மைச் சமூக முன்னெடுப்பாக நிதியளிக்கப்படும் இத்திட்டத்தின் மூலமாக நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளுக்கும் ஏனைய நிறுவனங்களுக்குமென 200 தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் வங்கியால் அன்பளிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கும் அவர்களின் டிஜிட்டல் கற்கை நாட்டங்களுக்கு வசதியேற்படுத்துவதற்காகவும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கூட்டாண்மைச் சமூகப் பொறுப்புப் பிரிவில் கொமர்ஷல் வங்கியின் பிரதான பங்களிப்பு இலங்கையின் தகவல் தொழில்நுட்பக் கல்விக்கு வழங்கப்பட்டுள்ளது. முழுமையான கருவிகளைக் கொண்ட 200 தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களைத் தவிர நாட்டிலுள்ள 65 பாடசாலைகளுக்கான கற்கை முகாமைத்துவத் திட்டம் (Learning Management System – LMS) ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு உதவும் ஸ்மார்ட் பாடசாலைகள் செயற்றிட்டம் இன் பங்காளராகவும் வங்கி காணப்படுகிறது. அதேபோல் வங்கியின் நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக 100 விஞ்ஞான தொழில்நுட்ப பொறியியல் கணித வகுப்பறைகளை உருவாக்குவதற்கான திட்டமொன்றுக்கும் வங்கி ஆதரவளிப்பதோடு பாடசாலைகளின் கணித ஆய்வுகளை ஏற்படுத்துவதற்கும் உயர் கல்விக்காகத் தகுதிபெறாத மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் நிதியளிப்புகளை மேற்கொள்கிறது. இலங்கைச் சிறுவர்களுக்குப் பரந்தளவிலான கல்வியறிவைக் கொண்டு வருவதற்கான இணையக் கல்வி இணையத்தளமாக விளங்கும் கொமர்ஷல் வங்கியின் சொந்தப் புத்தாக்கமான சிப்னென (Sipnena) இணையத்தளத்தையும் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 880 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.