GLX – இலங்கை சுற்றுலாத் துறை கூட்டணி இணைந்து சுற்றுலாத்துறை மறுசீரமைப்புக்கு நடவடிக்கை

இலங்கை சுற்றுலாத் துறை கூட்டணியுடன் GoodLife X இணைந்து தேசத்தின் சுற்றுலாத்துறைக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் “சுற்றுலாத்துறை மறுசீரமைப்புக்கு மானியம்” எனும் திட்டத்தினூடாக சுற்றுலாத்துறையைச் சேர்ந்த சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாண்மைகளுக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. நாட்டில் மற்றுமொரு முதன்மை அம்சமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், மாறி வரும் சூழலுக்கேற்ப சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாண்மைகளை வெற்றிகரமாக வழிநடத்துவதற்கு உதவுவதுடன், தற்போது உலகளாவிய ரீதியில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக எழுந்துள்ள வாய்ப்புகளை இனங்காண்பதற்கும் அவற்றை பின்பற்றி புதிய சந்தைகளுக்கு சேவைகளை வழங்க உதவும் வகையிலும் அமைந்துள்ளது.

டிசம்பர் 7 ஆம் திகதி இடம்பெற்ற மெய்நிகர் தகவல் பகிர்வு அமர்வில் கலந்து கொண்ட இலங்கை சுற்றுலாத்துறை கூட்டணியின் இணைத் தலைவர் மலிக் ஜே பெர்னான்டோ விண்ணப்பங்களை கோரும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் போது, “உங்கள் வியாபாரத்தை புத்தாக்கமாக்கி, வளர்ச்சியடையச் செய்து மற்றும் சிறப்பாக மீளக் கட்டியெழுப்புவதற்கு நிலைபேறான சிந்தனைகளுக்கு உதவ வேண்டும் எனும் எமது குறிக்கோளுக்கமைய நாம் GoodLife X உடன் கைகோர்த்துள்ளோம். நிலைபேறான சிந்தனைகள் என்பது நீடித்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதுடன், சூழலிலிருந்து பிரித்தெடுப்பதற்கு மாறாக உதவும் வகையில் அமைந்திருக்கும், எனவே, எமது உயிரியல் பரம்பலுக்கு அது பெறுமதி சேர்த்து, உள்நாட்டு சமூகங்களுக்கு உதவிகளை வழங்குவதுடன், உள்நாட்டு கலாசாரத்தை பேணி உங்கள் வியாபாரங்களுக்கு வருமான மூலத்தை ஏற்படுத்தும்.” என்றார்.

GLX நிகழ்ச்சிப் பணிப்பாளர் ரந்துலா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “GLX மற்றும் சுற்றுலாத்துறை கூட்டணி இடையிலான கைகோர்ப்பு என்பது இரு தரப்பினராலும் பகிரப்படும் பெறுமதிகள் ஒன்றித்திருப்பதனால் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. சுற்றுலாத்துறை கூட்டணியினூடாக இந்த மானியத்தை வழங்குவதற்கு நாம் கைகோர்க்கத் தீர்மானித்தோம். சகல பிராந்தியங்களிலும் சுற்றுலாத்துறை கூட்டணியின் சென்றடைவு என்பதை நாம் கவனத்தில் கொண்டதுடன், அவர்களின் நிலைபேறாண்மைக் கொள்கை தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தோம். GLX ஐச் சேர்ந்த எம்மை வழிநடத்தும் பிரதான அம்சங்களில் ஒன்றாக, சமூகத்துக்கு, மக்களுக்கு மற்றும் புவிக்கு நலனை மேற்கொள்ளும் வியாபாரங்களை ஊக்குவிப்பது அமைந்துள்ளதுடன், சுற்றுலாத்துறை கூட்டணி என்பதும் இதனை மேற்கொள்ள முன்வந்துள்ளது என நாம் கருதுகின்றோம்.” என்றார்.

இந்த மானியத்துக்கு தகைமை பெறுவதற்கு குறித்த சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை, இலங்கை கம்பனிகள் பதிவுத் திணைக்களத்தில் தம்மைப் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடங்களாகச் செயற்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கு (SME) இந்த திட்டம் உதவும். தெரிவு செய்யப்பட்டதும், ஒரு சிறிய, நடுத்தரளவு முயற்சியாண்மைக்கு 5,000 யூரோக்கள் முதல் 10,000 யூரோக்கள் வரை மானியத்துக்கு விண்ணப்பிக்க முடியும். மொத்தமாக 50,000 யூரோக்கள் மானியமாக வழங்கப்படவுள்ளது. புத்தாக்கமான நிலைபேறான சிந்தனையை நிறைவேற்றுவதற்கு நன்கொடை நிதியளிப்பை பயன்படுத்த முடியும் என்பதுடன், இதனூடாக குறித்த நிறுவனத்துக்கு மீண்டெழுவதற்கும் சூழல், உள்ளுர் சமூகங்கள் மற்றும்/அல்லது உள்ளுர் கலாசாரத்தில் நீடித்திருக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். மேலும் வியாபாரங்களுக்கு புத்தாக்கமாக இயங்கவும், சர்வதேச சந்தைகளிலிருந்து கவர்ந்திழுப்புகளை பெறக்கூடியதாகவும் இருக்கும்.

விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது 2020 டிசம்பர் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வரும். ஆர்வமுள்ளவர்கள், தகவல்களை இலங்கை சுற்றுலாத்துறை கூட்டணி Facebook பக்கத்தில் https://www.facebook.com/TourismAlliance/videos/179662593844094 பார்வையிடலாம். நிகழ்ச்சித்திட்டம் பற்றிய மேலதிக தகவல்களையும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை பற்றிய மேலதிக தகவல்களையும் https://www.srilankatourismalliance.com/grants-for-tourism- resilience/ எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இலங்கை சுற்றுலாத்துறைக் கூட்டணியானது ஒரு இலவச உறுப்பாண்மை அடிப்படையிலான அமைப்பாகும். 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இதன் நோக்கம் சர்வதேச நிலையான சுற்றுலாத்துறைச் சிறந்த நடைமுறைகளைத் தழுவுகின்ற ஒரு தாங்குதிறன் கொண்ட மற்றும் வலுவான தனியார் துறையை உருவாக்குவதும், சுற்றுலாத்துறைச் சலுகைகள் இலங்கை முழுவதிலும் ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள, சமூகங்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் செலுத்தப்படுவதும் தற்போதுள்ள தொழில் சங்கங்களுடன் இணைந்து செயல்படுவதும் ஆகும்.