தூய வளிக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் நிலைபேறான e-கழிவு முகாமைத்துவத்துக்கு INSEE Ecocycle உடன் CleanCo உடன்படிக்கை கைச்சாத்து

தேசத்தின் வளி மாசடைவை கட்டுப்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ள CleanCo Lanka (Pvt), நிபுணத்துவமான கழிவு முகாமைத்துவ நிறுவனமான INSEE Ecocycle உடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக, நிறுவனசார் e-கழிவை மீள்சுழற்சிக்குட்படுத்தி, தூய வளிக்கு பங்களிப்பு வழங்குவதுடன், சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

CleanCo நிறுவனமானது Drivegreen எனும் வர்த்தக நாமத்தினூடாக நாடு முழுவதிலும் காணப்படும் வாகனப் புகைப் பரிசோதனை நிலையங்களினூடாக, நவீன பரிசோதனை சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டு சர்வதேச பரிசோதனை நியமங்களுக்கமைய புகைப்பரிசோதனைகள் முன்னெடுக்கின்றது. இதனூடாக வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகளினூடாக நாட்டின் வளி மாசடைவதை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவு பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

e-கழிவின் பாகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவையாக அமைந்துள்ளன. இதில் செப்பு, நாகம், கட்மியம் போன்ற பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியுள்ளன. இந்த e-கழிவுகள் மனித சுகாதாரத்துக்கு பெரும் அபாயத்தை தோற்றுவிக்கக்கூடியன என்பதுடன், சூழலில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன என்பது பலரும் அறிந்திருக்காத உண்மையாக உள்ளது. e-கழிவுகளை முறையற்ற வகையில் சட்டவிரோதமான முறையில் காணிகளை நிரப்புவதற்காக கழிவகற்றுகின்றமை காரணமாக, இந்த இரசாயனங்கள் மண்ணில் கலந்து, பயிர்ச் செய்கையை பாதிக்கச் செய்யும். மண் வளத்தை பாதிப்பதற்கு மேலாக, e-கழிவுகளில் காணப்படும் உலோகங்கள் கசிந்து நிலத்தடி நீரில் கலந்து, நீரோடைகளினூடாக ஆறுகளில் கலந்துவிடுகின்றன. இதனால் நீர் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் சமூகங்களுக்கும் பாதுகாப்பற்றதாக மாறுகின்றது.

மேலும், எவ்வித சந்தைப் பெறுமதிகளையும் கொண்டிராத பொருட்கள், திறந்த வெளியில் எரியூட்டப்படுகின்றன அல்லது சூழலில் வெளியிடப்படுகின்றன. இதனால் வளி மாசடைகின்றது. இந்த மாசடைந்த வளியை பொது மக்கள் நுகர வேண்டியிருப்பதால், சுவாசத் தொகுதிசார் நோய்கள் ஏற்பட அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. e-கழிவுகளை எரியூட்டும் போது எழும் சிறு துணிக்கைகள் பல மைல் தூரம் வரை காற்றில் பயணித்து சுகாதார பிரச்சனைகளான பாரதூரமான நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் போன்ற அதிகளவு ஆபத்து நிறைந்த நோய்களை தோற்றுவிக்கின்றன.

இந்த பாரதூர நிலைமைகளை கவனத்தில் கொண்டு INSEE Ecocyle உடனான CleanCo இன் உடன்படிக்கை மூலமாக, நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் பாவித்த முகக் கவசங்கள், ஃபில்டர்கள் மற்றும் டோனர்கள் போன்ற கழிவுகள் அடங்கலான e-கழிவுகள் நிலைபேறான வகையில் மீள்சுழற்சிக்குட்படுத்தப்படும்.

இலங்கையில் பரிபூரண கழிவு முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் INSEE Ecocycle Lanka (Private) Limited, கடந்த 17 வருட காலப்பகுதியில் Co processing ஊடாக 1000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி, 1,000,000 மெட்ரிக் டொன்களுக்கு அதிகமான தொழிற்துறைசார் கழிவுகளை பாதுகாப்பான வகையில் அழித்துள்ளது. Co processing என்பது பாரதூரமான துணிக்கைகள் அடங்கலான தொழிற்துறைசார் கழிவுகளை வெப்பமூட்டி அழிக்கும் தொழில்நுட்பமாக அமைந்துள்ளது.

INSEE Ecocycle தன்வசம் நவீன வசதிகள் கொண்ட இலத்திரனியல் கழிவு பிரித்தெடுப்பு பகுதியைக் கொண்டுள்ளது, இதனூடாக மீள்சுழற்சி, re-directing, re-purposing மற்றும் co- processing ஊடாக முழு அளவிலான கழிவு முகாமைத்துவ தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

INSEE Ecocycle இன் co-processing வசதிகள் சகல ஒழுங்குபடுத்தல் தொழில்நுட்ப நியமங்களை பூர்த்தி செய்வதாக அமைந்திருப்பதுடன், சூழலுக்கு எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாமையால், எரியூட்டல் அல்லது காணி நிரப்புகைக்கு பயன்படுத்துவதற்கு மாறாக சிறந்த தெரிவாக கருதப்படுகின்றது.

இந்தத் திட்டத்தினூடாக, பொருளாதார, சமூக மற்றும் சூழல்சார் பிரச்சனைகளை தோற்றுவிக்கும் வகையில் e-கழிவுகள் காணி நிரப்பும் பகுதிகளை சென்றடையாமால் சரியான முறையில் மீள்சுழற்சிக்குட்படுத்தப்படுவதை CleanCo உறுதி செய்கின்றது.