தொழில்முயற்சிகளின் விரிவான காபன் வெளியேற்றம் பற்றிய மதிப்பீடுகளைத் தொடங்கியுள்ள செலிங்கோ லைஃப்

செலிங்கோ லைஃப் நிறுவனம் தனது நாடு தழுவிய செயற்பாடுகளின் போது காபன் வெளியேற்றம் பற்றிய விரிவான மதிப்பீட்டைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காபன் கன்ஸல்டிங் கம்பனி நிறுவனத்துடன் இணைந்து இந்நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

செலிங்கோ லைஃப்பின் பசுமை நிகழ்ச்சித் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த இரண்டாவது மட்ட பசுமைஇல்ல வாயு ‘Greenhouse Gas’ (GHG) மதிப்பீடு இலங்கையில் காப்புறுதித்துறையில் தலைமை தாங்கும் நிறுவனமான செலிங்கோ லைப்பின் சகலவிதமான நிறுவனரீதியான செயற்பாடுகள் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளியேற்றப்படும் GHG அளவு பற்றி விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளும்.

செலிங்கோ லைஃப் மேலும் நிலைத்தன்மை மிக்கதாகச் செயற்படுவதற்கான பல்வேறு வழிமுறைகளை ஏற்கனவே தனது நாடு தழுவிய கிளைகள் மூலம் செயற்படுத்தத் தொடங்கிவிட்டது. சுற்றாடலுக்கு இசைவான சூரிய சக்தி முறை மழை நீர் சேமிப்புத் திட்டம் கழிவு நீர் மீள் சுழற்சித் திட்டம் சக்திவள ஆற்றல் குறைந்த ஒளியமைப்பு மற்றும் குளிரூட்டல் முறை என்பனவற்றைக் கொண்ட கிளைக் கட்டிடங்களை நிர்மாணித்தல் இதில் முக்கியமானதாகும். தற்போது மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டு முறையானது தனது காபன் வெளியேற்ற பொறிமுறையை மேலும் ஆற்றல் மிக்க வகையில் கையாள பெரும் துணையாக அமையும். கம்பனியின் நிலைத்தன்மை முன்முயற்சிகளோடு தொடர்புடையதாக இந்த செயற்பாடு தொடர்ந்து இடம்பெறும். இது செலிங்கோ லைஃப்பின் தலைமைத்துவத்தை சந்தையில் மேலும் நிலைநிறுத்திக் கொள்ளவும் வழிவகுக்கும்.

செலிங்கோ லைஃப் மற்றும் காபன் கன்ஸல்டிங் கம்பனி என்பனவற்றுக்கு இடையில் இது சம்பந்தமான ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வைபவத்தில் செலிங்கோ லைஃப் தலைவர் ஆர்.ரெங்கநாதன், பணிப்பாளர் பாலித ஜயவர்தன (இடமிருந்து மூன்றாவது மற்றும் நான்காவது) காபன் கன்ஸல்டிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் மூலோபாய திட்டமிடல் பிரிவின் தலைவருமான சனித் டி.எஸ்.விஜேரத்ன, வாடிக்கையாளர் உறவுகள் முகாமைத்துவ உதவி முகாமையாளர் றுவன்தி ஹல்வல மற்றும் செலிங்கோ பசுமை சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரைப் படத்தில் காணலாம்.