2021 முதல் காலாண்டின் நிறைவில் SLT குழும வருமானம் ரூ. 24.7 பில்லியனாக பதிவு, நிகர இலாபம் 14% ஆல் உயர்வு

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT) குழுமம் தனது நிதிப் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது. இதில், வரிக்கு பிந்திய இலாபம் (நிகர இலாபம்) முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 14.3% இனால் உயர்வடைந்து ரூ. 2.1 பில்லியனாக பதிவாகியிருந்தது.

இக்காலப்பகுதியில் குழும வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.4% இனால் அதிகரித்து ரூ. 24.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் FTTH, 4G LTE, மொபைல் புரோட்பான்ட் சேவைகள், PEOTV சேவைகள் மற்றும் சேவை வழங்குநரின் உள்ளக சேவைகள் (Carrier Domestic Services) போன்றன உறுதியான பங்களிப்பை வழங்கியிருந்தன. சர்வதேச குரல் அழைப்புகள் மீதான வருமானம் சரிவைப் பதிவு செய்திருந்ததுடன், குளோபல் இடம்மாறல் மற்றும் குளோபல் டேட்டா (gloabal transit and global data) ஆகியவற்றினால் பெறப்பட்ட வருமானங்கள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பெருமளவு அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தன.

குழுமத்தின் EBITDA (வரிக்கு முந்திய வருமதிகள், வரி, மதிப்பிறக்கங்கள் மற்றும் கடன்கழிப்பு நிதிச் சேர்ப்புகள்) போன்றன ரூ. 9.7 பில்லியனாக வளர்ச்சியடைந்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.6% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இதனூடாக EBITDA எல்லைப் பெறுமதியை முன்னைய ஆண்டின் 38.6% இலிருந்து 39.4% ஆக உயர்த்தியிருந்தது. EBITDA வளர்ச்சியில் வருமானத்தின் வளர்ச்சி என்பது பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பத்தில் பதிவாகும் மாற்றங்களுக்கமைய பொருந்தச் செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கான மூலதன செலவீனம் அதிகரிப்பினால் குழுமத்தின் மதிப்பிறக்கம் மற்றும் கடன்கழிப்பு நிதிச் சேர்ப்புகள் ரூ. 6.3 பில்லியனாக அதிகரிக்கச் செய்திருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18.0% அதிகரிப்பாகும்.

குழுமத்தின் தொழிற்படு இலாபம் என்பது ரூ. 3.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.3% அதிகரிப்பை பிரதிபலித்திருந்தது. இக்காலப்பகுதிக்காக உயர்ந்திருந்த மதிப்பிறக்கம் மற்றும் கடன்கழிப்பு நிதிச் சேர்ப்புகளினூடாக பகுதியளவில் ஈடுசெய்யப்பட்டிருந்த குழுமத்தின் EBITDA இல் பதிவாகியிருந்த அதிகரிப்பு இதில் பங்களிப்பு செலுத்தியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இலாபம் அல்லது நட்ட அறிக்கையின் மீதான வட்டி செலவீனங்கள் மற்றும் நிதிச் செலவு ரூ. 0.8 பில்லியனாக அதிகரித்திருந்ததுடன், FOREX இழப்புகள் ரூ. 0.3 பில்லியனாக குறைந்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் (PBT) ரூ. 2.8 பில்லியனாக அதிகரித்திருந்ததுடன், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.3% உயர்வை பதிவு செய்திருந்தது.

மீளாய்வுக்குட்படுத்திய காலப்பகுதியில் EBITDA இன் மீதான வளர்ச்சியுடன், குழுமத்தின் வினைத்திறன் வாய்ந்த சேகரிப்பு தந்திரோபாயங்கள் போன்றன குழுமத்தின் தொழிற்படு பணப்பாய்ச்சலை சுமார் மூன்று மடங்காக அதிகரிக்கச் செய்து ரூ. 12.2 பில்லியனாக பதிவாகச் செய்திருந்தது. மேலும், அறிக்கையிடப்பட்ட திகதியன்று குழுமத்தின் நீண்ட கால கடன்பெறுகைகளை ரூ. 44.9 பில்லியாக குறைத்துக் கொள்ளவும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

குழுமத்தின் தாய் நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13.5% இனால் அதிகரித்து ரூ. 14.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.2% அதிகரிப்பை பதிவு செய்து 1.4 பில்லியனாக அதிகரித்திருந்தது.

இக்காலாண்டில் SLT குழுமத்தின் மொபைல் பிரிவான மொபிடெல் பிரைவட் லிமிடெட்டினதும் வருமானம் முன்னயை ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8.1% இனால் அதிகரித்து ரூ. 11.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. மொபிடெலின் வரிக்கு பிந்திய இலாபம் 65.4% இனால் உயர்ந்து ரூ. 1.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. அதிகரித்த வருமானம் மற்றும் வினைத்திறன் வாய்ந்த செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக இந்தப் பெறுபேறுகளை எய்த முடிந்தது.

2021 முதல் காலாண்டு பகுதியில் குழுமம் மொத்தமாக ரூ. 3.7 பில்லியன் ரூபாயை நேரடி மற்றும் மறைமுக வரிகளாகவும் கட்டணங்களாகவும் அரசாங்கத்துக்கு செலுத்தியிருந்தது. SLTகுழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத்தெரிவிக்கையில்: “மற்றுமொரு உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்வதற்கு காரணமாக அமைந்த, எனது நிர்வாக அணியினர் மற்றும் சக ஊழியர்கள் தொடர்பில் நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். முதல் காலாண்டில் எமது வியாபாரம் தொடர்ந்தும் துரித வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், உயர்ந்த தொழிற்படு பணப்பாய்ச்சலுடன், வருமானங்கள் மற்றும் இலாபங்கள் போன்றன இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. SLT-MOBITEL இன் கீழ் எமது குழும விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல்கள் போன்றன ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன், முதல் காலாண்டில் நாம் பதிவு செய்துள்ள உயர்ந்த நிதிப் பெறுபேறுகளுக்கு பெருமளவு காரணமாக அமைந்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தொடர்ந்தும் உறுதியற்ற சூழல் நிலவுவதுடன், வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது, சாதகமான சந்தைப் போக்குகள், தொழிற்படு வினைத்திறனை மேம்படுத்துவது மற்றும் எமது சகல பங்காளர்களுக்கும் பெறுமதியை சேர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.

SLT குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில்: “முதல் காலாண்டில் நாம் பதிவு செய்துள்ள நிதிப் பெறுபேறுகளினூடாக, 2021 ஆம் ஆண்டை நாம் உறுதியாக ஆரம்பித்துள்ளோம் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. SLT-MOBITEL வர்த்தக நாம ஒன்றிணைப்புடன் 2021 ஆம் ஆண்டை நாம் ஆரம்பித்திருந்தோம். SLT குழுமத்தின் வரலாற்றில் இது மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. டிஜிட்டல் மாற்றியமைப்புக்கான SLT குழுமத்தின் தந்திரோபாய பயணம் என்பது தற்போதைய தொற்றுப் பரவலுடனான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், தினசரி வாழ்க்கையில் தொழில்நுட்பம் என்பது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்குகின்றது என்பதை உறுதி செய்துள்ளது. கொவிட்- 19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள சவால்களுக்கு குழுமம் வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளதுடன், இதில் எமது துரித வியாபார நிறைவேற்றத்துடன், கவர்ச்சிகரமான தீர்வுப் பிரிவுகள் போன்றன முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.” என்றார்.

SLT பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்: “எமது துரிதப்படுத்தப்பட்ட fibre விரிவாக்க நடவடிக்கைகளை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதுடன், அதனூடாக நாடு முழுவதிலும் அதி-வேக Fibre-to-the-Home (FTTH) இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த ஆண்டு SLT ஐயைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடமாக அமைந்துள்ளது. SLT அதன் மொபைல் பிரிவான மொபிடெலுடன் இணைந்து தற்போதைய 4G வலையமைப்பை விரிவாக்கம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தி மேம்படுத்தப்பட்ட புரோட்பான்ட் அனுபவத்தை வழங்குவதுடன், 3.5 GHz ஐப் பயன்படுத்தி வணிகத்துக்கு முன்னரான 5G சேவையை அறிமுகம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. மேலும், தனது சர்வதேச வலையமைப்பை விரிவாக்கம் செய்யும் வகையில் SEA-ME-WE 06 கடலடி கேபிள் வலையமைப்பினை உள்வாங்கி உலகுடன் செக்கன் ஒன்றுக்கு டெரா பிட்கள் எனும் வேகத்துடன் இணைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. தொடர்ச்சியாக வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சேவை மட்டங்களை மேம்படுத்தும் வகையில் எமது பல்வேறு டிஜிட்டல் செயற்திட்டங்களுக்கு உதவும் வகையில் உள்ளக மற்றும் சர்வதேச வலையமைப்பு விரிவாக்கங்கள் அமைந்திருக்கும்.” என்றார்.

SLT பிரதம செயற்பாட்டு அதிகாரி, பிரியந்த பெர்னான்டஸ் கருத்துத் தெரிவிக்கையில்: “கொவிட்-19 தொற்றுப் பரவல் காலப்பகுதியில், தேசத்துக்கு தடங்கல்களில்லாத சேவையை SLT வழங்கியிருந்ததுடன் புத்தாக்கமான மற்றும் குறைந்த கட்டணங்களில் டேட்டா பக்கேஜ்களை வழங்கி வீட்டிலிருந்து பணியாற்றுதல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு வசதியளித்திருந்தது. மேலும், Cisco மற்றும் Millennium I.T.E.S.P. பிரைவட் லிமிடெட் நிறுவனத்துடன் SLT இணைந்து புதிய SD-WAN சேவைகளை அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக இலங்கை அரசாங்கத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. மேலும், எமது மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் PEO TV Go சேவைகளை SLT-MOBITEL நீடித்திருந்ததுடன், அதனூடாக தமக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வசதியை ஏற்படுத்தியிருந்தது.” என்றார்.

மொபிடெல் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரன கருத்துத் தெரிவிக்கையில்:

“தற்போது நிலவும் கொவிட்-19 தொற்றுப் பரவலுடன் உலகம் தொடர்ந்தும் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், அத்தியாவசிய சேவையை வழங்கி வரும் SLT-MOBITEL இனால் சகல பங்காளர்கள் மத்தியிலும் பெறுமதி சேர்க்க முடிந்துள்ளது. தேசிய மொபைல் சேவைகள் வழங்குநரான மொபிடெல், பின்தங்கிய கிராமப் பகுதிகளுக்கும் துரிதமாக தமது சேவைகளை விரிவாக்கம் செய்வதுடன், அதனூடாக இந்த நெருக்கடியான காலப்பகுதியில் அனைவரின் மீது கவனம் செலுத்துவதை உறுதி செய்துள்ளது. இக்காலப்பகுதியில் அனைவரையும் புரோட்பான்ட் சென்றடையச் செய்வதற்காக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சாதனங்களுடன் இணைந்த சலுகைகளினூடாக, ஸ்மார்ட்ஃபோன் ஊடுருவல் அதிகரித்துள்ளதுடன், அப்ளிகேஷன் பிரகாரமான டேட்டா திட்டங்கள், மொபைல் மற்றும் ஹோம் புரோட்பான்ட் திட்டங்கள் போன்றன வீட்டிலிருந்து பணியாற்றல் மற்றும் கற்றலைத் தொடரல் போன்றவற்றுக்கு பயனளிப்பதாக அமைந்துள்ளன. அனைவருக்கும் புரோட்பான்ட் சேவைகளை பெற்றுக் கொள்ளும் வகையில், SLT-MOBITEL இனால் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் தேசத்துக்கு தடங்கல்களில்லாத இணைப்பு வசதிகளை வழங்குவது இலக்காக அமைந்துள்ளது.” என்றார்.