புதிய திட்டத்தை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது

நிலையான வைப்பில் இருந்து பணம் என்ற புதிய திட்டத்தை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. தமது நிலையான வைப்புக் கணக்கோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ள பிரத்தியேகமானதோர் டெபிட் அல்லது கிரடிட் கார்ட் மூலம் தமது நிலையான வைப்பில் இருந்து பணத்தை மீளப் பெறும் முறையே இதுவாகும்.

வங்கியில் நிலையான வைப்புக்களைக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத விதமாக அவசரமாகப் பணம் தேவைப்படும் போது அதைப் பெற்றுக் கொள்ள வழியமைக்கும் வகையில் இந்தத் திட்டம் விஷேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

அவசர நிலைமைகளின் போது Cash on FD முறை உள்ளவர்கள் தமது நிலையான வைப்புக் கணக்குகளை இடை நிலை ஒப்பந்தத்தில் மூட வேண்டும் என்ற தேவை நீக்கப்படும். இதனால் குறிப்பிட்ட ஒப்பந்த காலப் பகுதிக்கான வட்டி வருமானத்தை அவர்கள் இழப்பர்.

குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாவுடன் ஒரு வருட காலம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு நிலையான வைப்பை தொடங்குபவர்கள் இந்த Cash on FD வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். பிரத்தியேகமான ஒரு டெபிட் கார்ட் மூலம் தமது கணக்கில் இருந்து 90 வீதத்தை அவர்கள் மீளப் பெறலாம் என வங்கி அறிவித்துள்ளது.

டெபிட் கார்ட் மூலம் இந்த வசதியைப் பாவிக்க விரும்புகின்றவர்களுக்கு உடனடி டெபிட் கார்ட் ஒன்று வழங்கப்படும். விஷேட கணக்கு ஒன்றின் மூலம் 300 ரூபா என்ற சலுகைக் கட்டணத்தில் இந்த கார்ட் வழங்கப்படும். நிறுவனக் கட்டணங்கள் எதுவும் இதற்கு அறவிடப்பட மாட்டாது.

டெபிட் கார்ட்டுக்கு பதிலாக வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். தமது வைப்பின் 75% பெறுமதிக்கு இதைப் பெறலாம். ஏனைய கிரடிட் கார்ட்டுகளுக்குரிய எல்லா அனுகூலங்களையும் வாடிக்கையாளர் இந்தக் கார்ட் மூலமாகவும் அனுபவிக்கலாம். இதற்கும் இணைவுக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டா நிலையான வைப்பின் காலம் முழுவதும் கிரடிட் கார்ட்டுக்கான வருடாந்த கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

18 வயதுக்கு மேற்பட்ட எவரும் குறிப்பிட்ட நிலையான வைப்புத் தொகையுடன் Cash on FD முறைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் வங்கி அறிவித்துள்ளது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.