பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் மருந்து உற்பத்திச்சாலையை திறந்து வைத்தாா்

இலங்கையின் மிகப்பெரிய வாய்வழி திட மருந்து உற்பத்தியாளரும், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பீஎல்சீயின் துணை நிறுவனமுமான மொரிசன் பீஎல்சீ, வைபவரீதியில் தங்கள் புதிய அதிநவீன உற்பத்திச்சாலை மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் 2020 அக்டோபர் 02 ஆம் திகதி திறந்து வைத்தது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சி ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர், மருத்துவர் சீதா அரம்பேபொல மற்றும் வர்த்தக அமைச்சரின் செயலாளர், கலாநிதி சுனில் நவரத்ன ஆகியோர் உட்பட, பல அரசு அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். ஹோமாகமை பிடிப்பனையிலுள்ள Sri Lanka Nano Technology Park இல் அமைந்துள்ள இது, மொரிசன் பீஎல்சீயின் இரண்டாவது உற்பத்திச்சாலையாகும். இந்த தொழிற்சாலை செல்லுபடி சோதனைகளை ஆரம்பிக்க தயாராக உள்ளது, மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வணிக அளவிலான உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அத்தியாவசிய மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஆதரிக்கிறது.

அனைத்து இலங்கையர்களுக்கும் உயர் தரமான, மலிவான விலைக்கு மருந்துகள் கிடைப்பதை அதிகரிக்க மொரிசன் உறுதிபூண்டுள்ளதுடன், இலங்கையின் மாத்திரை தேவைகளில் 20% க்கும் அதிகமானவற்றை வழங்குவதற்கான திறனுடைய புதிய தொழிற்சாலையுடன் அதை செயல்படுத்துகிறது. உள்ளூர் மருந்துகளின் உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் மொரிசனின் புதிய தொழிற்சாலை 18.5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் இலங்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது, இது இலங்கையில் முதல் ஐரோப்பிய யூனியன்-நல்ல உற்பத்திநடைமுறைகள் (EU-GMP) இணக்கமான வாய்வழி திட மருந்து உற்பத்திச்சாலை ஆகும்.

விழாவில் உரையாடிய மொரிசன் பீஎல்சீயின் நிர்வாக பணிப்பாளர் முர்தசா ஏசுஃபலி, இம்முயற்சி குறித்து கூறுகையில், “மிகவும் உயர்தரமான தயாரிப்புகளை மலிவு விலையில் வழங்கும் எங்கள் 80 ஆண்டுகால பணியைத் தொடர்ந்து கொண்டு, புதிய அதிநவீன உற்பத்திச்சாலையை அறிமுகப்படுத்துவது மொரிசன் பீஎல்சீக்கு ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது. அரசாங்கத்தின் உத்தரவாதமான திரும்ப வாங்குதல் ஒப்பந்தங்கள் மூலம் ஆதரிக்கப்படும் இந்த முதலீடு, எம்மை உலக சந்தைகளில் அதிக போட்டித்தன்மையுடன் இருக்க உதவும். தொடர்ச்சியான அரசாங்க ஆதரவு எங்களுக்கு ஏற்றுமதியில் வலுவான தடம் ஒன்றை உருவாக்கவும், உலகளாவிய மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்த உற்பத்தி கூட்டாண்மைகளைத் தொடங்கவும் உதவும், மேலும் எதிர்காலத்தை நோக்கும்போது இது இலங்கைக்கு மதிப்புமிக்க அந்நிய செலாவணியைப் பெற உதவும்.” என்றார்.

GMP இணக்கத்திற்கு மருந்துகள் நிலையான உயர் தரத்தை பேணுவது மற்றும் அவற்றின் அசல் பயன்பாட்டிற்கு பொருத்தமானவையாக இருப்பதும் அவசியமாகும். உலகளாவிய, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளுக்கு நம்பகமான மருந்து உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் இருக்க EU-GMP ஒரு அத்தியாவசிய தேவையாகும்.

மொரிசனில் நாங்கள் உலகளாவிய மருந்துத் துறை முன்னோடிகளுடன் கூட்டு சேர்ந்து மிக உயர்ந்த தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம், மேலும் அவர்களுடன் ஹேமாஸ் வலுவான, மரபு ரீதியான உறவுகளைக் கொண்டிருக்கிறது. புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய சந்தைகளில் வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க இப்புதிய கட்ட வளர்ச்சியை நாங்கள் ஆராய்வோம்”, என தொடர்ந்தும் கூறிய ஏசுஃபலி, SLINTEC உடனான எங்கள் கூட்டாண்மை நானோ மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கும் ஆராய்ச்சியில் முன்னேற உதவும் என்று கூறினார்.

75 வெவ்வேறு மருந்துகளை உருவாக்கும் மொரிசன், இலங்கையின் வளர்ந்து வரும் மருத்துவத் தேவைகளை, குறிப்பாக தொற்றா நோய்களுக்கான மருத்துவத் தேவைகளை நிவர்த்திசெய்யும் துறையை, வரவிருக்கும் ஆண்டுகளில் வளர்க்க எதிர்பார்க்கிறது. அதன் புதிய தொழிற்சாலை தினசரி இரண்டு ஷிஃப்டுகளில் அதிகபட்ச திறனில் வேலை செய்யும் போது ஆண்டுக்கு 5 பில்லியன் மாத்திரைகள் மற்றும் 10 மில்லியன் மருந்து போத்தல்கள் உற்பத்திசெய்யும் திறன் கொண்டது. மேலும் 250 திறமையான வேலைகளை உருவாக்குவதன் மூலம் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழிற்சாலையின் வலிமை அதன் உற்பத்தி திறன்களில் மட்டும் அடங்கியதல்ல. அதிக திறமையான வேலைகளை உருவாக்குவதும், ஹோமாகம சமூகத்தை மேம்படுத்துவதற்கு இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மருந்து விஞ்ஞான அறிவு வழங்குவதிலும், உள்ளகப் பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சிக்காக உயர் கல்வி நிறுவனங்களுடன் பணியாற்றுவதிலும் அது அடங்கி உள்ளது.

புதிய தொழிற்சாலை மனித பிழையைத் தடுக்க குறைந்தபட்ச மனித தலையீட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளளதுடன் முழுமையான தானியங்கி திரவ உற்பத்தி மற்றும் பொதிசெய்தல், முழுமையான வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வகங்கள், சுற்றுச்சூழல் நிலைமைகளைக் கட்டுப்படுத்த தனி காற்று கையாளல் அலகுகள் போன்ற அதிநவீன கருவிகளையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், இது நிறுவன வள திட்டமிடல் (Enterprise Resource Planning) மென்பொருளுடன் பொருத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதலாவது பூச்சிய திரவ வெளியேற்ற கழிவு நீர் அமைப்புகளையும் இத்தொழிற்சாலை கொண்டுள்ளது.

மொரிசன் பீஎல்சீ பற்றி

மொரிசன் பீஎல்சீ இலங்கையில் 1939 ஆம் ஆண்டில் ஜே.எல். மொரிசன் சன் & ஜோன்ஸ் (சிலோன்) பீஎல்சீ ஆக செயல்படத் தொடங்கி 1964 இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. மே 2013 இல், ஹேமாஸ் குழுமம், நிறுவனத்தின் கட்டுப்பாட்டு பங்குகளை வாங்கியது. மொரிசன் பீஎல்சீ என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும், இது மருந்து உற்பத்தியில் எட்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், Morison’s Gripe Mixture, Lacto Calamine, மற்றும் Valmilex போன்ற வணிக நாமங்களுக்கும் புகழ்பெற்றது.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பீஎல்சீ பற்றி

1948 இல் நிறுவப்பட்ட ஹேமாஸ் ஒரு எளிய நோக்கத்துடன் தொடங்கியது: குடும்பங்களை ஆரோக்கியமாக வாழ உதவுவது. இந்த எண்ணத்தை மையமாக வைத்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வளர்ச்சி தொடர்ந்துள்ளது. இன்று, 6,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு முன்னணி பொது நிறுவனமாக, நுகர்வோர், சுகாதாரம் மற்றும் அசையுந்தன்மை ஆகிய துறைகளில் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வரிசை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை நாங்கள் கொண்டு வருகிறோம். இலங்கையின் சமூக பொருளாதாரத் துணியால் பிணைக்கப்பட்டுள்ள ஹேமாஸ், பங்களாதேஷ், மேற்கு வங்கம் மற்றும் மியான்மர் ஆகிய பிரதேசங்களிலும் பிராந்திய ரீதியில் விரிவடைந்துள்ளது. முன்னோக்கி செல்லும் எங்கள் பயணத்தில், நாங்கள் தொடர்ந்து மாறுபட்ட மற்றும் உணர்ச்சிமிக்க அணிகளில் முதலீடு செய்வோம், அர்த்தமுள்ள விடயங்களை உருவாக்குவோம், நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்துக் கொள்வோம், மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வென்றெடுப்போம், இதன்மூலம் எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் சாதகமான தாக்கத்தை உருவாக்குவோம்.