சியெட் ரூ 10 மில். பெறுமதியான கருவிகளையும் தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகளையும் அன்பளித்தது

இலங்கையில் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும் வகையில் கருவிகளும் அத்தியாவசிய நுகர்பொருட்களுமென தொடர்ச்சியான அன்பளிப்புகளை சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஓரளவுக்குச் சுமூக நிலையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் கொவிட்-19க்கு எதிராகப் போராடும் நாட்டின் முக்கியமான அரச நிறுவனங்கள் தமது செயற்பாடுகளைத் தொடர்ந்தும் பேணுவதற்கு உதவும் வகையிலேயே இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சுகாதார அமைச்சு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை அவ்வைத்தியசாலையின் பட்டப்பின் மருத்துவப் பயிற்சி நிலையம் லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பதுளை பொது வைத்தியசாலை ஸ்ரீ லங்கா பொலிஸ் ஆகிய ஆறு நிறுவனங்களுக்கே 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமன பெறுமதியைக் கொண்ட அன்பளிப்புகளை இலங்கையின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சியெட் களனி நிறுவனம் வழங்கியுள்ளது.

நடமாடும் செயற்கை சுவாசகருவி (transport ventilator) உட்செலுத்தல் எக்கிகள் இரண்டு (infusion pumps) தொடர்ச்சியான நேர் அழுத்தத்தை மூச்சுவழிக்கு வழங்கும் இயந்திரமொன்று (continuous positive airway pressure – CPAP) உறிஞ்சல் கருவிகள் இரண்டு (suction apparatus units) படுக்கை மலத்தட்டு அலம்பு இயந்திரமொன்று (bed pan washer) மீளப்பயன்படுத்தக்கூடியதும் ஒரு தடவை பயன்படுத்தப்படுவதுமான தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் (Personal Protection Equipment – PPE) மீளப்பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட பாதுகாப்பு மேலங்கிகள் முகக் கேடயங்கள் (Face Shields) PCR சோதனைக் கருவிகள் RNA பிரித்தெடுக்கும் கருவிகள் (RNA Extraction Kits) வைரஸைக் காவிச்செல்லும் கருவிகள் (Viral Transport Media) ஆகியன அன்பளிக்கப்பட்ட கருவிகளுள் உள்ளடங்குகின்றன.

மேலதிகமாக தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்துக்குப் புதிய குளிரூட்டிகள் (air conditioner), புதிய உட்கூரை மின்சாரத் திருத்தல் வேலைகள் ஆகியவற்றிலும் உதவிய சியெட் களனி நிறுவனம்ரூபவ் ஸ்ரீ லங்கா பொலிஸுக்கு உலருணவுப் பொதிகளை அன்பளித்தது.

வேறான இன்னோர் அன்பளிப்பில் கண்டியின் பல்லேகெல்லவில் அமையவுள்ள 106 படுக்கைகளைக் கொண்ட புதிய இராணுவ வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளுக்காக இரண்டு மில்லியன் ரூபாயை சியெட் களனி நிறுவனம் அண்மையில் அன்பளித்திருந்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ரவி டட்லானி இந்த் தொற்றுப்பரவலுக்கெதிராக முன்னரங்கில் நின்று போராடுவோரின் மிகப்பெரும் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நாம் மிகவும் போற்றுகிறோம். அத்தோடு அவர்களுக்கு உதவுவதற்காக எங்களால் முடிந்தளவில் பங்களிப்பை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியாக உள்ளோம். அதேபோன்று அந்நியச் செலாவணிப் பரிமாற்றத்தைக் காக்கும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் உற்பத்திகளை அதிகரித்து செலவுகளைக் கட்டுப்படுத்தி நாம் உதவுகிறோம் எனத் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜூன் முதலாம் திகதியன்று சியெட் நிறுவனம் நீண்டகாலத் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தது. இதன்படி பயணிகளினதும் பஸ் பணியாளர்களினதும் பாதுகாப்பையும் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தவும் லொறிகளில் பணியாற்றுபவர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகளை வழங்குவதோடு முக்கியமான இடங்களில் சேவையாற்றும் லொறிகளுக்குக் கிருமிநீக்கம் செய்வதன் மூலமாக உதவி வருகிறது. அதேபோன்று நாடு முழுவதிலுமுள்ள டயர் விநியோக நிறுவனங்கள் தமது பணியாளர்களைத் தொடர்ந்தும் பணியிலமர்த்துவதற்கும் உதவி வருகிறது.

கொழும்பு மாவட்டத்தில் செயற்படும் 350 பஸ்களில் பயணிகள் ஏறும்போது அவர்களின் தேவைக்கெனக் கைச்சுத்திகரிப்புத் திரவங்களை வழங்குதல் சியெட் களனி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களில் ஒன்றாகும். இந்த பஸ்களுக்கான கைச்சுத்திகரிப்புத் திரவங்களை மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கும் மூன்று மாதங்களுக்குத் தேவையான தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகளை பஸ் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் வழங்குவதற்கும் சியெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. ஒவ்வொரு தொகுதியும் ஆறு முகமூடிகள் ஆறு சோடிக் கையுறைகள் தனிப்பட்ட கைச்சுத்திகரிப்புத் திரவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.